1829 ஏரிகளில் குடிமராமத்து பணிகள்- சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாமில் முதல்வர் தகவல்

372 0

தமிழகம் முழுவதும் 1829 ஏரிகளில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் இரண்டாவது நாளாக நடந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாம் தொடக்க விழாவில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
உடலுக்கு உயிர் முக்கியமானது போல், விவசாயிகளுக்கு நீர் மிகவும் முக்கியம் ஆகும். கண்ணுக்கு இமை போல் விவசாயிகள் நீர்நிலைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மழை நீர் வீணாவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 2019-20ல் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1829 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் தொடங்கி உள்ளன. விவசாய சங்கங்களின் உறுப்பினர்கள் அடங்கிய குழு மூலம் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன.
குறைதீர்ப்பு திட்டத்தில் பலர் மனைப்பட்டா கேட்டும், பட்டா மாறுதல்  கேட்டும் விண்ணப்பம் அளிக்கின்றனர். தகுதி வாய்ந்த மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காணப்படும். தகுதி வாய்ந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பட்டா இருந்தும் வீடுகள் அற்றவர்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும். 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.