சென்னைக்கு இதுவரை ரெயிலில் 142.5 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை

308 0

ஜோலார்பேட்டையில் இருந்து இதுவரை சென்னைக்கு ரெயிலில் 142.5 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் அரசு உத்தரவின்படி காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 1 கோடி லிட்டர் குடிநீரை வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. அதன்படி சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் முதல் ரெயில் ஜூலை 12-ந் தேதி ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டது.

50 வேகன்கள் கொண்ட சிறப்பு ரெயிலில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு கூடுதலாக மற்றொரு ரெயில் இயக்கப்பட்டு மேலும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் அனுப்பப்பட்டது. அதன்படி 2 ரெயில்களில் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தமிழக அரசு

ஒரு தடவை ரெயிலில் குடிநீர் கொண்டு செல்ல ரூ.8.6 லட்சம் தமிழக அரசுக்கு செலவாகிறது. இதன் மூலம் ரெயில்வே நிர்வாகம் இதுவரை ரூ.4.73 கோடி சம்பாதித்துள்ளது.

12-ந் தேதியில் இருந்து நேற்று வரை 142.5 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த குடிநீர் சென்னை மாநகர மேற்கு பகுதிகளில் சப்ளை செய்யப்படுகிறது.

சென்னைக்கு திட்டமிட்டபடி தினமும் 10 மில்லியன் லிட்டர் கொண்டு செல்ல முடியவில்லை இதனால் கூடுதலாக 2 ரெயில்கள் இயக்க வேண்டுமென மெட்ரோ அதிகாரிகள் ரெயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதையடுத்து 3-வது ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மேலும் ஒரு ரெயில் வரவழைக்கபட்டு இந்த வாரம் 3-வது ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ரெயில்வே நிர்வாகம் அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் திட்டம் தொடங்கி இன்றுடன் 1 மாதம் நிறைவடைந்த நிலையில், திட்டமிட்டப்படி 1 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு செல்லும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.