காஷ்மீர் விவகாரம்- ஐ.நா.சபை இன்று ஆலோசனை

442 0

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியதை அடுத்து ஐ.நா.சபையில் இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது.

காஷ்மீர் மாநிலத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருப்பதுடன் அந்த மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளன.

ஏற்கனவே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வரும் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையால் கடும் ஆத்திரத்தில் உள்ளது.

இதனால் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாடுகளிடமும் சென்று அதனுடைய ஆதரவை கேட்டது. ஆனால் எந்த நாடுகளும் ஆதரவு அளிக்க முன்வரவில்லை.

நமது பக்கத்து நாடான சீனா மட்டும் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவு நிலை எடுத்து வருகிறது. இந்த வி‌ஷயத்திலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே நடந்து கொள்கிறது.
பாகிஸ்தான் கொடி

காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கடிதம் கொடுத்தது. அத்துடன் பாதுகாப்பு சபை உறுப்பு நாடான சீனாவும், காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் விவாதிக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் எந்த ஒரு விவகாரத்தை பற்றி விவாதிக்க வேண்டும் என்றாலும் அதற்கு முன்பாக இது விவாதத்திற்கு ஏற்றது தானா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு ஆலோசனை செய்வதற்கு தற்போதைய பாதுகாப்பு சபை தலைவராக உள்ள போலந்து நாட்டை சேர்ந்த நிதி ஜோன்னா ரொனேக்கா ஒத்துக்கொண்டுள்ளார்.

அதன்படி இன்று உறுப்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். ரகசியமாக இந்த ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. அதில் பெரும்பான்மை நாடுகள் விவாதம் நடத்த வேண்டும் என்று கூறினால் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா, பிரான்சு, ரஷியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்தியாவுக்கு சாதகமான நிலையை எடுத்துள்ளன. எனவே பாதுகாப்பு சபையில் விவாதம் நடத்துவதற்கு அந்த நாடுகள் சம்மதிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 1965-ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. இப்போது இந்த வி‌ஷயத்தை பாகிஸ்தான் ஐ.நா. சபையில் முன்னெடுத்து சென்றுள்ளது.

விவாதம் நடைபெறுமா? இல்லையா? என்பது இனிமேல் தான் தெரியவரும். விவாதம் நடைபெறும் பட்சத்தில் உறுப்பு நாடுகளிடம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு அதன்பிறகு ஐ.நா. சபை முடிவுகள் எடுக்கும்.