மாகாண சபைத் தேர்தலை நடத்துவது பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவிரைவில் -தேசப்பிரிய

274 0

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவிரைவில் அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரவித்துள்ளனார்.

நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

எனவே, மாகாண சபைத் தேர்தலை நடத்துவது பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவிரைவில் அறிவிக்கப்படும்.

புதிய தேர்தல் முறைமை அறிக்கைக்கு நாடாளுமன்றத்தில் இன்னும் ஒப்புதல் வழங்காதமையே மாகாண சபைத் தேர்தல் தடைப்பட்டமைக்கு காரணம்.

மேலும் புதிய தேர்தல் அறிக்கையில் திருத்தங்களை செய்ய பிரதமர் தலைமையிலான குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும், இவ்விடயத்தில் இறுதி நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை.

எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு கால அவகாசம் தேவை. அந்தவகையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு 50 நாட்களாவது சாதாரணமாக தேவைப்படும்.

மேலும் இந்த வருட இறுதிக்குள் நாட்டின் பிரதான தேர்தல்களான மாகாணசபை மற்றும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையகம் தீர்மானித்திருக்கும் நிலையில் சட்டத்திற்கு முரணான பிரசாரங்களை மேற்கொள்வது குறித்து முகநூல் பிரதிநிதிகளிடம் விரைவில் கலந்துரையாடல் நடத்த தீர்மானித்துள்ளோம்” என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.