ஏமன் உள்நாட்டுப் போர் – ஏடன் நகரை பிரிவினைவாதிகள் கைப்பற்றினர்

264 0

ஏமனில் உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில் அந்நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான ஏடனை பிரிவினைவாதிகள் கைப்பற்றினர்.தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில், அதிபர் மன்சூர் ஹைதி தலைமையிலான அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை 11,000-க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் தேடி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

அதுமட்டும் இன்றி அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் மனிதாபிமான உதவிகளுக்கு காத்திருப்பதாக ஐ.நா. கூறுகிறது.

ஏமன் உள்நாட்டுப் போரில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் களத்தில் இருக்கின்றன. அதே போல் ஹவுதி கிளர்ச்சி படைக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க அந்நாட்டின் தெற்கு பகுதியை தனி நாடாக அறிவிக்கக்கோரி தெற்கு இடைக்கால சபை என்ற பெயரில் ஆயுதம் ஏந்திய பிரிவினைவாத அமைப்பு போராடி வருகிறது.

இந்த பிரிவினைவாத அமைப்புக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு அளிக்கிறது. உள்நாட்டுப் போரை பொறுத்தமட்டில் தெற்கு பிரிவினைவாதிகள் அரசு பக்கமே இருந்தனர்.

அதாவது அரசு படைகளுடன் இணைந்து தெற்கு பிரிவினைவாதிகளும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வந்தனர்.

ஆனால் இந்த கூட்டணி நீண்டகாலமாகவே ஒரு தர்ம சங்கடமான நிலையிலேயே இருந்து வந்தது. இந்த சூழலில் நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து அரசுப்படைகளை விரட்டியடித்து, அதை தங்கள் வசமாக்க தெற்கு பிரிவினைவாதிகள் முடிவு செய்தனர்.

அதன்படி நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரும், தெற்கு துறைமுக நகருமான ஏடனை கைப்பற்றும் முயற்சியில் அவர்கள் இறங்கினர்.

ஏடனில் உள்ள அரசு படைகளுக்கும் தெற்கு பிரிவினைவாதிகளுக்கும் இடையே கடந்த இரு தினங்களாக கடுமையான மோதல் நீடித்து வந்தது. இதில் அப்பாவி மக்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ஏடனில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் ராணுவ முகாம்களை தெற்கு பிரிவினைவாதிகள் அதிரடியாக கைப்பற்றினர். இதன் மூலம் ஏடன் நகரம் முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக தெற்கு பிரிவினைவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

அதிபர் மாளிகை தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதும், அங்கிருந்த 200-க்கும் மேற்பட்ட ராணுவவீரர்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கப்பட்டதாக தெற்கு பிரிவினைவாத அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஏடன் நகரம் கைப்பற்றப்பட்டது, ஒரு சதி என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவுடன் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு என்றும் ஏமன் அரசு கூறுகிறது.

ஏடன் நகரை தெற்கு பிரிவினைவாதிகள் கைப்பற்றியதை கடுமையாக கண்டித்து சவுதி அரேபியா ராணுவ நடவடிக்கையின் மூலம் இதற்கு பதில் அளிக்கப்படும் என எச்சரிக்கைவிடுத்துள்ளது.