சிறந்த செயல்பாட்டுக்கான முதல்-அமைச்சர் விருதுக்கு சேலம் மாநகராட்சி தேர்வு

38 0

சிறந்த செயல்பாட்டுக்கான முதல்-அமைச்சர் விருதுக்கு சேலம் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சுதந்திர தின விழாவின் போது சேலம் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.

தமிழக நகராட்சி நிர்வாகங்களின் முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, 3 நகராட்சிகளுக்கு கடந்த 2012-2013-ம் நிதி ஆண்டு முதல், முதல்-அமைச்சர் விருது மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இதற்காக தமிழக அரசு ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்கிறது.

இதன்மூலம் சிறந்த மாநகராட்சிக்கு ரூ.25 லட்சமும், சிறந்த 3 நகராட்சிகளுக்கு தலா ரூ.15 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம் வீதமும் வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது முதல்-அமைச்சரால் இந்த விருது மற்றும் பரிசு தொகை வழங்கப்படுகிறது.

2018-2019-ம் நிதி ஆண்டுக்கான இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நகராட்சிகளாக தர்மபுரி, வேதாரண்யம், அறந்தாங்கி ஆகிய நகராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
எடப்பாடி பழனிசாமி

15-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது, இந்த மாநகராட்சி, நகராட்சிகளுக்கு முதல்-அமைச்சர் விருது மற்றும் பரிசுத்தொகையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.