சஹரானின் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து தனக்கு இரண்டு உளவுத்துறை தகவல்கள் கிடைத்ததாக முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகி சாட்சியம் வாங்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சட்டம் ஒழுங்கு அமைச்சராக தான் 7 மாதங்கள் மட்டுமே கடமையாற்றியுள்ளதாக தெரிவித்த அவர், தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் திறம்பட செயற்பட நிரந்தர அமைச்சரும் சட்டம் ஒழுங்கு செயலாளரும் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
அவ்வாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக இருந்த காலத்தில் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரானின் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து தனக்கு இரண்டு உளவுத்துறை தகவல்கள் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.
முதலாவது அறிக்கை 2018 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி கிடைக்கபெற்றதாகவும் இது காத்தான்குடியில் இரண்டு இஸ்லாமிய பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பானது என்றும் இரண்டாவதாக அதே ஆண்டு மே 19 ஆம் திகதி சஹரானின் தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் ஐ.எஸ். செயல்பாடுகளை வரவேற்கும் உரைகள் பற்றி கிடைத்ததாகவும் குறிப்பிட்டார்.
அந்த அறிக்கைகளின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அந்த அறிக்கைகளைப் பெற்ற பின்னர், 2018 ஜூலை 9 ஆம் திகதி சஹரானை கைது செய்ய பயங்கரவாத தடுப்பு பிரிவினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது என அவர் கூறினார்.
இதன் பின்னர் சஹரானைக் கைது செய்ய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பல குழுக்களை அனுப்பியது என்றும் குறிப்பாக அவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தபட்டது என்றும் கூறினார்.
இதேவேளை பொலிஸ் அதிகாரிகள், குருநாகலில் அவரது மனைவியின் வீடு அமைந்திருந்த நாரம்மலவுக்குச் சென்றிருந்தனர். ஆனால் சஹரான் அங்கு கூட இருக்கவில்லை என தெரிவித்தார்.

