புழல் ஜெயிலில் 12 கைதிகள் 2-வது நாளாக உண்ணாவிரதம்

295 0

201610221056321425_2nd-day-of-the-12-prisoners-on-hunger-strike-in-prison-to_secvpfபுழல் ஜெயிலில் 12 கைதிகள் 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தனர்.

அம்பத்தூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார். திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்த இவர் கடந்த 2014-ம் ஆண்டு மர்ம கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அபுதா கீர், ஜாவுரி சலீம், சபி யுல்லா உள்ளிட்ட 12 பேரை போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.

நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணையின் போது பூந்தமல்லி கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குற்றவாளிகள் 12 பேரும் புழல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தனர்.

இந்த நிலையில் கைதிகளின் உண்ணாவிரதம் இன்று 2-வது நாளாக நீடித்தது. இன்று காலை அவர்களுக்கு உணவு கொடுக்கப்பட்ட போது சாப்பிட மறுத்து உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சிறைத்துறை டி.ஐ.ஜி. கருப்பண்ணன், சூப்பிரண்டு அன்பழகன் ஆகியோர் 12 கைதிகளிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகளுடன் கைதிகள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 2 ஆண்டுகள் ஆகியும் ஜாமீன் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினர்.

மேலும் வழக்கு விசாரணையை பூந்தமல்லி கோர்ட்டுக்கு மாற்றக்கூடாது, வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

கைதிகள் 2-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதால் சிலரது உடல் நிலை சோர்வடைந்து உள்ளது. அவர்களை சிறைத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.