ரூ.160 கோடி செலவில் பேரிடர் மீட்பு பணிக்காக ரப்பர் படகு,சுவாச கருவிகள் – ஆர்.பி. உதயகுமார்

247 0

பேரிடர் மீட்பு பணிக்காக ரூ160 கோடியே 31 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தீவுத்திடலில் பேரிடர் மீட்பு பயிற்சி தொடர்பான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பேரிடர் மீட்பு பணிக்காக ஹைட்ராலிக் மூலம் செயல்படும் தானியங்கி மர அறுப்பான்கள், ரோபோடிக் எஸ்கலேட்டர், அதிக திறன் கொண்ட நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் வாங்கிட ரூ.22 கோடியே 13 லட்சம் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு துறைக்கு, வாட்டர் பவுசர், நீர் இறைப்பான்கள், மரம் அறுப்பான்கள், ஜெனரேட்டர்கள், மீட்பு படகுகள், கட்டட இடிபாடுகளில் சிக்கி நபர்களை சுவாசக் கருவிகளுடன் பத்திரமாக மீட்டெடுக்கும் உபகரணம், ஊடுருவும் நிழற்படக் கருவி, வெள்ளம் சூழும் காலங்களில் மீட்பு பணிகளை துரிதப்படும் பிரத்யேக வாகனங்கள், ஆழமான இடங்களில் தேடுதல் பணிக்கு தேவைப்படும் உடைகள், ஆழ்துளை மீட்பு உபகரணங்கள், அவசர கால மீட்பு உபகரணங்கள் ஆகியவை வாங்க 30 கோடியே 86 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

நீர் உறிஞ்சும் இயந்திரங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், ஜெனரேட்டர்கள், மீட்பு படகுகள், இன்பிளேட்டபிள் லைட் உபகரணங்கள், தீயணைப்பு வாகனங்கள், ரப்பர் படகுகள், மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள், வி.எச்.எப். கருவிகள் வாங்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

துளையிடும் கருவிகள், சிலிண்டர்களுடன் கூடிய சுவாசக் கருவிகள், உயிர் காப்பு மிதவை கருவிகள், படகுகள், ஆக்சிஜன் மற்றும் அசிட்டிலின் ஆகிய வாயுக்கள் அடங்கிய சிலிண்டர்களுடன் கூடிய கட்டர்கள், உயர் கோபுர விளக்குகள் என 138 வகையான உபகரணங்கள் வாங்க பல்வேறு துறைகளுக்கு ரூ160 கோடியே 31 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.