தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு – பவுன் ரூ.27 ஆயிரத்தை தாண்டியது

233 0

பெண் குழந்தைகளை வைத்திருப் போருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து உள்ளது. ஒரு பவுன் தங்கத்தின் விலை நேற்று ரூ.27 ஆயிரத்தை தாண்டியது.தங்கத்தின் விலை கடந்த 2 மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

கடந்த மாதத்தில் ராக்கெட் வேகத்தில் அதிகரித்த தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. கடந்த மாதத்தின் இறுதியில் சற்றே விலை குறைந்து காணப்பட்டது.

நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சிறிது குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.26-ம், பவுனுக்கு ரூ.208-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 310-க்கும், ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்து 480-க்கும் விற்பனை ஆனது.

ஆனால் நேற்று ஒரே நாளில் திடீரென்று பவுனுக்கு ரூ.500-க்கும் அதிகமாக விலை உயர்ந்தது. அதாவது நேற்று மாலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.73-ம், பவுனுக்கு ரூ.584-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.3,383-க்கும், ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்து 64-க்கும் விற்பனை ஆனது.

இதுவரை இல்லாத வகையில் வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலை உச்சத்தை எட்டி இருக்கிறது. இதுவரை ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.27 ஆயிரத்தை தொட்டது இல்லை. ஆனால் இந்த முறை ரூ.27 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.

கடந்த மாதம் 19-ந் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.26 ஆயிரத்து 904-க்கு விற்பனை ஆனது. அதன்பிறகு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இப்போது ரூ.27 ஆயிரத்தை தாண்டி இருப்பது, பெண் குழந்தைகளை வைத்திருப்போருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாக தங்கம் விலை உயரும்போது எல்லாம், வெள்ளி விலையும் அதிகரித்து காணப்படும். ஆனால் நேற்று வெள்ளி விலை குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு 60 காசும், கிலோவுக்கு ரூ.600-ம் குறைந்து, ஒரு கிராம் 44 ரூபாய் 30 காசுக்கும், ஒரு கிலோ ரூ.44 ஆயிரத்து 300-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை தொடர்ந்து உயருவதற்கான காரணம் குறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியதாவது:-

சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு அமெரிக்கா புதிதாக 10 சதவீதம் வரிவிதித்து இருக்கிறது. இதேபோல் மத்திய வங்கி கூட்டமைப்பு கூட்டத்தில் வட்டி வீதத்தை 0.25 சதவீதம் குறைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவின் டாலர் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.

இந்த காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் அனைவரும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயருகிறது. இனிவரக்கூடிய நாட்களிலும் இதேநிலைதான் நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.