யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு-5 பொலிஸார் கைது(காணொளி)

365 0

jaffna-accidentயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நேற்று இரவு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் 5 பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 12 மணியளவில் யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்திப்பகுதியில் இரு பல்கலைக்கழக மாணவர்களும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது பொலிஸார் நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மாணவன் ஒருவன் இறந்ததற்கான சான்றுகள் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்ற சரத் திஸ்ஸநாயக்க தலைமையிலான 5 பொலிஸாரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனையின்போது ஒரு மாணவனின் உடலில் துப்பாக்கிச் சன்னங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மற்றைய மாணவன் சூட்டுச் சம்பவம் காரணமாக மோட்டார் சைக்கிள் விபத்திற்குள்ளாகி இறந்ததற்கான சான்றுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பவுண்ராசா சுலக்சன் மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நடராசா கஜன் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

கொல்லப்பட்ட மாணவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட 3ஆம் வருடத்தில் கல்வி கற்ற மாணவர்களாவர்.

யாழ்ப்பாண நீதிபதி எஸ்.சதீஸ்வரன் சூட்டுச் சம்பவம் நடந்த இடத்தை காலை பார்வையிட்டுள்ளார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த உடல்களையும் பார்வையிட்டார்.

இன்று மாலை 6 மணியளவில் நீதிபதி எஸ்.சதீஸ்வரன் மாணவர்களின் பெற்றோரையும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒருசிலரையும் அழைத்து நிலைமையை விளக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் மாவையுடன் முரண்பட்டபோது(காணொளி)

உயிரிழந்த இரு மாணவர்களினதும் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த போது யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வைத்தியசாலை பிரேத அறைக்கு பார்வையிடச் சென்றபோது பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பாக மாவை சேனாதிராசாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பங்களிற்கு அனுதாபம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியை சந்தித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்தவும் கோரிக்கை.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பங்களிற்கு அனுதாபத்தை தெரிவித்ததுடன் திருகோணமலைக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பக்கச்சார்ப்பற்ற விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொலிஸ்மா அதிபரிடமும் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக கண்டனத்தை தெரிவித்து துரித நடவடிக்கை எடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

யாழ் நகரப்பகுதி மற்றும் பொலிஸ் நிலையத்தில் விசேட பொலிஸார் பாதுகாப்புக்கடமையில்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, யாழ் நகரப்பகுதி மற்றும் பொலிஸ் நிலையத்தில் விசேட பொலிஸார் பாதுகாப்புக்கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 5 பொலிஸாரும் நாளை யாழ்ப்பாண நீதிமன்றில் முன்னிலை

இதேவேளை கைது செய்யப்பட்ட 5 பொலிஸாரும் நாளை காலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இறந்த மாணவர்களின் பொற்றோருக்கு உதவியாக செயற்படும்  சட்டத்தரணி கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் இன்று இரவு 07.15 மணியளவில் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளையதினம் சுலக்சனின் ஈமக்கிரியைகள் கந்தரோடையில் இடம்பெறவுள்ளதாகவும், கிளிநொச்சி மாணவனின் ஈமக்கிரியைகள் தொடர்பாக பெற்றோர்கள் இன்னமும் தீர்மானிக்கவில்லை என அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.