“என்னுடைய அரசியல் வாரிசு மு.க.ஸ்டாலின் தான்” கருணாநிதி பரபரப்பு பேட்டி

343 0

201610210723116306_my-political-successor-mk-stalin-karunanidhi-interview_secvpfதி.மு.க.வில் தற்போது அழகிரி இல்லை என்றும், தன்னுடைய அரசியல் வாரிசு மு.க.ஸ்டாலின் தான் என்றும் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி பரபரப்பாக கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி பிரபல வாரப் பத்திரிகையான ஆனந்த விகடனுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.

பேட்டியின்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:-

ஸ்டாலின் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது

கேள்வி:- எந்த நோக்கத்துக்காக நீங்கள் அரசியலுக்கு வந்தீர்களோ, அது நிறைவேறிவிட்டதா?.

பதில்:- பெரும் அளவுக்கு நிறைவேறியுள்ளது. நிறைவேறியது அனைத்தும் முழுமையான அளவுக்கு மனநிறைவைத் தந்துவிட்டது என என்னால் சொல்ல முடியவில்லை. இன்னும் நிறைவேறவேண்டியவை நிறைய உள்ளன. அந்த நோக்கங்களையும் நிறைவேற்றிடத்தான் நான் இன்னும் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.

கேள்வி:- தி.மு.க.வில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் போன்றோர் கால் நூற்றாண்டைக் கடந்தும் அதே பதவியில் இருப்பது, இளைஞர்களுக்குத் தடையாக இருக்காதா?.

பதில்:-புதிய இளைஞர்கள் இயக்கத்துக்காக உழைத்து வளர்வதற்கு, தி.மு.க.வில் எதுவும் தடையாக இருக்க முடியாது. இங்கே படிப்படியாகத்தான் வளர்ச்சி அடைய முடியும். அப்படிப்பட்ட வளர்ச்சிதான் நின்று நிலைக்கும். சில கட்சிகளைப்போல, நேற்று நுழைந்து, இன்று மாவட்டச் செயலாளராக நியமனம் பெறுவது என்பது தி.மு.க.வில் இயலாத ஒன்று. இங்கே அனுபவம் வாய்ந்தவர்கள், புதிய இளைஞர்களை ஆதரித்து, அரவணைத்து, ஊக்குவித்து வளர்த்து வருகிறோம். புதியவர்களும், பழையவர்களை முன்மாதிரிகளாகக் கொண்டு அவர்களின் அடிச்சுவட்டில் ஆர்வத்தோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி:- தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் செயல்பாட்டை எப்படிக் கணிக்கிறீர்கள்?.

பதில்:- தம்பி ஸ்டாலினின் செயல்பாடு சிறப்பாகவும், மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருக்கிறது. கட்சியினரையும், கட்சியையும் அவர் வழிநடத்திச் செல்லும் பாங்கு, மனதுக்கு மிகவும் நிறைவு தருவதாக உள்ளது.

என்னுடைய அரசியல் வாரிசு

கேள்வி:- ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்ற பேச்சும், எதிர்பார்ப்பும் பரவலாக உள்ளதே. உங்கள் அரசியல் வாரிசு யார்?.

பதில்:- ஸ்டாலின் மிக இளைஞராக இருந்த காலத்திலேயே கோபாலபுரம் இளைஞர் மன்றத்தை உருவாக்கி, ஓடியாடி பாடுபட்டு, பின்னர் மிசா காலத்தில் சிறைக்குச் சென்ற நாளில் இருந்து, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆட்பட்டு, அவரே தானாக உழைத்து, உழைத்து, தி.மு.க.வின் வருங்காலத் தலைவர் என்ற நிலைக்கு தன்னைத்தானே படிப்படியாக உயர்த்திக்கொண்டவர். அந்த வகையில், அவர்தான் இன்றைக்கு என்னுடைய அரசியல் வாரிசாகவும் திகழ்கிறார்.

கேள்வி:- தி.மு.க.வை வழிநடத்த ஒரு தலைமைக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?.

பதில்:- தலைவன் – தொண்டன் என்ற எண்ணம் சிறிதும் இன்றி, அண்ணன் – தம்பி என்ற பாசப்பிணைப்பு, கட்சித் தோழர்களின் பொது வாழ்விலும், குடும்ப வாழ்விலும் அக்கறை, கட்சித் தோழர் எவரிடமும் பகை-வெறுப்பு பாராட்டாத பண்பு, எல்லோரும் பின்பற்றும் லட்சிய மாதிரியாகத் திகழுதல், பகுத்தறிவு – சுயமரியாதை, இன உணர்வு காத்திடும் போர்க்குணம், அரசியல் நிகழ்வுகளின் போக்கை முன்கூட்டியே தீர்மானிக்கும் பார்வை, சமரசம் இல்லாத கொள்கைப் பிடிப்பு போன்றவையே தலைமைக்கான தகுதிகள்.

ஓயாமல் உழைப்பவன் நான்

கேள்வி:- தி.மு.க.வில் மு.க.அழகிரி இல்லாததை ஓர் இழப்பாக நீங்கள் கருதுகிறீர்களா?.

பதில்:- இருப்பதை எண்ணி மகிழ்ந்து, மேலும் மேலும் முன்னேற்றப் பாதையில் நடைபோட வேண்டுமே தவிர, தி.மு.க.வில் தற்போது இல்லாத யாரையும் நினைத்து, ஏங்கி நிற்பது பயணத்துக்கு தடையாகிவிடும்.

கேள்வி:- அரசியல் பரபரப்புகளில் இருந்து ஓய்வுபெற்று தலைமைப் பதவியை ஸ்டாலினுக்கு விட்டுத்தரும் யோசனை ஏதேனும் உங்களுக்கு உள்ளதா?

பதில்:- ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து, ஓயாமல் உழைப்பவன் இந்தக் கருணாநிதி. அதனால் தலைமைப் பதவியை ஸ்டாலினுக்கு விட்டுத்தரும் யோசனையே இல்லை என நீங்கள் ‘குழப்படி’ வேலை செய்ய வேண்டாம். எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பாக இருந்து தி.மு.க. பணிகள் பலவற்றை தம்பி ஸ்டாலின் தான் ஆற்றி வருகிறார் என்பது தான் உண்மை.

ஜெயலலிதாவிடம் பிடித்த விஷயம்

கேள்வி:- ஜெயலலிதா உங்களுக்கு எத்தகைய அளவில் சவாலாக இருக்கிறார்?

பதில்:- நான் இதுவரை யாரையும் எனக்குச் சவாலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டது இல்லை.

கேள்வி:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குணமாக வேண்டி முதலில் நீங்கள் தான் அறிக்கை வெளியிட்டு வாழ்த்தினீர்களே!

பதில்:- அருமை நண்பர் எம்.ஜி.ஆர். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது, ‘நானும் பிரார்த்திக்கிறேன்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரையே எழுதி இருந்தேன். அதே உணர்வோடுதான் இப்போதும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பரபரப்பாக செய்தி வந்தவுடனேயே அவர் விரைவில் முழுமையான உடல் நலம் பெற்று பணிக்கு திரும்பிட வேண்டும் என வாழ்த்தி, அப்போதே அறிக்கை வெளியிட்டிருந்தேன். இப்போதும் வாழ்த்துகிறேன்.

கேள்வி:-ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்த விஷயங்கள், பிடிக்காத விஷயங்கள்?

பதில்:-பிடித்த விஷயம் நடனம், நடிப்பு. பிடிக்காத விஷயம் காழ்ப்புணர்ச்சி அரசியல்.

கேள்வி:-எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு, அவரை ‘மிஸ்’ பண்ணி விட்டோம் என என்றாவது நினைத்தது உண்டா?

பதில்:-எம்.ஜி.ஆரை பொறுத்தவரையில், அவர் தொடக்கத்தில் என்னுடன் பழகிய காலத்தில் இருந்த இனிய நினைவுகள் தான் எனது உள்ளத்தில் மேலோங்கி இருக்கின்றனவே தவிர, கட்சியை விட்டு பிரிந்த பிறகு நடைபெற்ற சம்பவங்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளாததால், அவர் மறைவுக்கு பிறகு அவரை மிஸ் பண்ணி விட்டோம் என நான் பலமுறை நினைத்திருக்கிறேன்.

அரசியல் வாழ்வில் கற்றுக்கொண்டது

கேள்வி:- இத்தனை வருட அரசியல் வாழ்க்கை, உங்களுக்குக் கற்றுக்கொடுத்தது என்ன?.

பதில்:- என்னால் பயன்பெற்றவர்கள், கைதூக்கிவிடப்பட்டவர்கள் எப்போதும் என்னிடம் நன்றி உணர்வோடு நடந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பது தவறு என்பதையும், ஒருவருக்கு நாம் செய்யும் உதவியை நமக்குக் கிட்டிய நல்வாய்ப்பாகக் கருதி செய்து முடித்ததும் அதை மறந்துவிட வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்திருக்கிறது.

கேள்வி:- அரசியலில், பொதுவாழ்வில் வெற்றிபெற நினைப்பவர்கள் செய்யக் கூடாத தவறுகள் எவை?.

பதில்:- காழ்ப்புணர்ச்சி கூடாது. யாரிடமும் வெறுப்பு – விரோதம் கூடாது. சோம்பி இருக்கக்கூடாது. சுறுசுறுப்போடு உழைப்பு. அரசியல் நிகழ்வு எதையும் அலட்சியம் செய்யக்கூடாது. காரியம் ஆற்றுவதிலும், கருத்துரைப்பதிலும் தாமதம் கூடாது. இப்படிப்பட்டவர்களால் தான் பொதுவாழ்வில் வெற்றி பெற முடியும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.