வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன் விழா மண்டபத்தில், இன்று மாலை நடைபெற்றது.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம், திட்டமிட்ட ரீதியில் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட, விடுதலைப் போராட்டத்தின் ஸ்தாபகத் தலைவர்கள் தங்கத்துரை, குட்டிமணி, முன்னணி போராளி ஜெகன், தேவன் உட்பட 53 பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில், இந்த அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதன் போது, 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை நினைவேந்தலுடன், 2009 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மண்ணில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் முகமாகவும், அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்றைய அஞ்சலியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.


