சந்திரயான் – 2 விண்கலத்தின் புவி வட்டப்பாதை இரண்டாவது முறையாக நேற்று அதிகரிக்கப்பட்டது.
நிலவின் தென்துருவத்தில் கனிம வளங்கள், தண்ணீர் உள்ளதா; அங்கேமனிதன் வாழ்வதற்கு சாதகமான சூழல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய சந்திரயான் — 2 என்ற விண்கலத்தை 22ல் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான’இஸ்ரோ’ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த விண்கலம் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

இரண்டாவது முறை
இந்த விண்கலம் நிலவு வட்டப்பாதையை நெருங்கும் வகையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் படிப்படியாக அதன் புவி வட்டப்பாதையை அதிகரித்து வருகின்றனர். கடந்த 24ல் இதன் புவி வட்டப்பாதை முதல் முறையாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று கூறியதாவது:சந்திரயான் – 2 விண்கலத்தின் புவி வட்டப்பாதை இரண்டாவது முறையாக நேற்று அதிகரிக்கப்பட்டது. புவி வட்டப்பாதையை அதிகரிக்கும் இந்த நிகழ்வு 15 நிமிடங்கள் நடந்தது.

அடுத்த சில நாட்களில் மேலும் 13 முறை இதன் புவி வட்டப்பாதையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14க்கு பின் புவி வட்டப்பாதை அதிகரிப்பு நிறுத்தப்பட்டு சந்திரயான் – 2 விண்கலம் நிலவை நெருங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

