இந்தியாவுடன் நல்லுறவு; அமெரிக்கா அறிவிப்பு

411 0

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மிக சிறப்பான நல்லுறவு நிலவுகிறது’ என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என பிரதமர் மோடி என்னிடம் ஜப்பானில் கேட்டார்’ என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த வாரம் பேட்டியளித்திருந்தார்; அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது. ‘காஷ்மீர் விவகாரத்தில் யாருடைய மத்தியஸ்தத்தையும் இந்தியா ஏற்க தயாரில்லை. அதிபர் கூறியது தவறானது’ என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பார்லிமென்டில் அறிவித்தார்.

 

உறவில் பாதிப்பில்லை

இதனால் இந்தியா – அமெரிக்கா உறவு பாதிக்கப்பட்டுள்ளதா என அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தித் தொடர்பாளர் கெல்லியானே கன்வேயிடம் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில் ”இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு சிறப்பாக உள்ளது; வளர்ந்து வருகிறது” என்றார்.மேலும் அமெரிக்கா வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் இணைந்து போராடி வருகிறோம். அவ்வாறே தொடர்வோம் என உறுதி அளித்திருந்தார். அதுபற்றி வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ நேற்று கூறும் போது ”இம்ரான் கான் அளித்துள்ள உறுதிமொழிகளை காப்பாற்ற கடமைப்பட்டுள்ளார்” என்றார்.

 

வட கொரியா அதிபர் கிம் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையே பேச்சு நடந்த போதிலும் வட கொரியா சமீபத்தில் அதிநவீன ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. அதுபற்றி அமெரிக்கா வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மார்கன் ஆர்டகஸ் நேற்று கூறும் போது ”பேச்சு மூலமே பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு முரணான செயல்பாடுகள் கூடாது. சர்வதேச ஒப்பந்தங்களை வட கொரியா மதித்து நடக்க வேண்டும்” என்றார்.