குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி

372 0

குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.சர்வதேச கோர்ட்டு நீதிபதிகள், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைத்து  அதிரடி தீர்ப்பு அளித்தனர். மேலும், அவர் மீதான தண்டனையை மறு ஆய்வு செய்யவும் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை சர்வதேச கோர்ட்டின் தலைமை நீதிபதி அப்துல் காவி அகமது யூசுப் வாசித்தார்.

16 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 15 நீதிபதிகள் இந்த தீர்ப்பை ஒரு மனதாக அளித்தனர். ஒரு நீதிபதி மட்டுமே எதிரான நிலையை எடுத்துள்ளார். எனவே பெரும்பான்மை தீர்ப்பு நடைமுறைக்கு வரும்.  குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் அணுக அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில், வியன்னா ஒப்பந்தப்படி தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிப்பது தொடர்பான உரிமைகள்,  குல்பூஷண் ஜாதவுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் சட்டங்களின்படி, குல்பூஷண் ஜாதவை தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி வழங்கப்படும் என்றும், அதற்கான நடைமுறைகளை வகுத்து வருவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பரில், குல்பூஷண் ஜாதவை அவரது மனைவியும் தாயாரும் கடும் கட்டுப்பாடுகளுடன் சந்திக்க பாகிஸ்தான் அரசு அனுமதித்தது. அதன் பிறகு குல்பூஷண் ஜாதவின் நிலை குறித்து வெளியுலகிற்கு ஏதும் தெரியாது. இந்நிலையில், இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிக்கப்படும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.