யாழ் மாநகர சுகாதாரப் பிரிவில் கைகலப்பு

358 0

யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரப் பிரிவு மேற்பார்வையாளர் மற்றும் சுகாதாரத் தொழிலாளிகள் தொழிற்சங்கத் தலைவர் இருவரையும் இருவேறு குற்றச்சாட்டு வழக்குகளில் இரண்டு நாள்கள் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டார்.

யாழ்ப்பபாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு மேற்பார்வையாளர், பெண் தொழிலாளி ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாடையடுத்து அவரைத் தாக்கினார் என்று தெரிவிக்கப்பட்டது.

அதனை அறிந்து அங்கு சென்ற சுகாதாரத் தொழிலாளிகள் தொழிற்சங்கத் தலைவர், மேற்பார்வையாளருடன் முரண்பட்டு அவரைத் தாக்கினார்.

இச் சம்பவங்கள் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. பெண் தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய மேற்பார்வையாளர் மற்றும் தொழிற்சங்கத் தலைவர் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர் இருவர் மீதும் தனித்தனி வழக்குப் பதிவு செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் இன்று முற்படுத்தினர்.

யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரப் பிரிவு மேற்பார்வையாளர் சார்பிலும் சுகாதாரத் தொழிலாளி சார்பிலும் சட்டத்தரணிகள் முன்னிலையாகினர். அவர்கள் சந்தேகநபர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேகநபர்கள் இருவரையும் இரண்டு நாள்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டு வழக்குகளை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்தார்.

இதேவேளை, தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தியும், மாநகர சபை ஆணையாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பணி இடைநீக்க கடித்தினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார தொழிலாளர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.