சிறிசேன மீண்டும் தமிழ் மக்களை வன்முறை ரீதியான சூழலுக்குள் வலிந்து இழுக்கிறார்– ஸ்ரீதரன்

509 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தமிழ் மக்களை வன்முறை ரீதியான சூழலுக்குள் வலிந்து இழுக்கிறார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிங்கள மக்கள் வாழாத பகுதிகளில் விகாரைகள் அமைப்பது நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் குறிப்பிடுகையில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தமிழ் மக்களை வன்முறை ரீதியான சூழலுக்குள் வலிந்து இழுக்கிறார்.

ஜே.ஆர்.ஜெயவர்தன காலத்தில் இருந்த போரென்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்றவாறான அந்த ஆட்சியின் நீட்சியாகவே இப்போது மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடும் அமைந்துள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவில் நீராவியடிப் பிள்ளையார், திருகோணமலையில் வென்னீரூற்று பகுதிகளில் பௌத்த விகாரைகள் வைக்கப்படுகின்றன. யாழில் மிகப் பிரமாண்டமான முறையில் பௌத்த விகாரை திறந்து வைக்கப்படுகின்றது.

நாம் தென்னிலங்கையில் பௌத்த விகாரைகள் எங்கு வைக்கப்பட்டாலும் அது தொடர்பாக கதைப்பதில்லை. ஆனால் சிங்கள மக்கள் வாழாத பகுதிகளில் பௌத்த விகாரைகள் வைப்பது குறித்து பேச வேண்டியுள்ளது.

இவ்வாறு தமிழர் பகுதிகளில் குறிப்பாக முல்லைத்தீவு, திருகோணமலை பகுதியில் வைக்கப்படும் புத்தர் சிலைகள் அமைக்கும் பணிகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அவர் இந்து விவகார அமைச்சர் மனோ கணேசனிடம் வேண்டுகோள் விடுத்தார்.