ஒவ்வொரு பிரஜைக்குமான சேவையை கட்சி பேதம் இன்றியே அரசாங்கம் செய்கின்றது – கயந்த

429 0

நாட்டின் பிரஜை ஒருவருக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் கட்சி பேதம் பார்க்காமல் அரசாங்கம் செய்து வருவதாக காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பொதுமக்களுக்கான காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவ்ர் தெரிவிக்கையில், “இலவச அம்பியூலன்ஸ் சேவையை நாட்டில் நடைமுறைப்படுத்தும் போது இந்தியா, இலங்கையில் தலையீடு செய்வதாக கூறினர். அதாவது, இந்தியா புத்திசாதுரியமாக இலங்கையை கட்டுப்படுத்த முனைவதாக எதிர்கட்சிகள் கூறினர்.

குறிப்பாக இந்தியாவிலிருந்து அம்பியூலன்ஸ் சாரதிகள், தாதியர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்படவுள்ளதாகவும் குற்றஞ்சுமத்தினர்.

இலங்கையில் உள்ள சில வைத்தியர்களும் அந்த அம்பியூலன்ஸில் நோயாளர்களைக் கொண்டு வந்தால் சிகிச்சை அளிப்பதில்லை எனக் கூறினர். இன்று என்ன நடந்துள்ளது? குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களே 1990இலக்கத்திற்கு அழைத்து அந்த அம்பியூலன்ஸ் சேவையை பெற்றுக் கொள்கின்றனர்.

எனவே அரசாங்கம் முன்னெடுக்கும் சிறந்த திட்டங்களின் மூலம் அரசாங்கம் நன்மையடையும் எனக் கருதியே இவர்கள் இவ்வாறு குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.

முன்னைய அரசாங்கம் பச்சை, நீலம் ஆகிய நிற கட்சிகளை முன்னிலைப்படுத்தியே சலுகைகளை வழங்கியது. ஆனால் இன்று அந்த நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது.