கப்பம் கொடுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்டார் பிரதமர் – ஜே.வி.பி

351 0

கல்முனை வடக்கு பிரதேச சபை விவகாரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க எழுத்து  மூலம் சம்பந்தன்  உள்ளிட்ட  தமிழ் தேசிய கூட்டமைபினருக்கு உத்தரவாதம் கொடுத்தே அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டார்.  ரணில் விக்கிரமசிங்க வழமைபோன்று கப்பம் கொடுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்டார் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்ற நிலையில் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் சரியான ஒரு தீர்மானம் எடுத்திருந்தால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை நாம் வெற்றிகொண்டிருக்க முடியும்.

ஆனால் பிற்பகல் 4.30 மணியளவில் கல்முனை வடக்கு பிரதேசசபை விவகாரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடிதம் மூலம் சம்பந்த  உள்ளிட்ட  தமிழ் தேசிய கூட்டமைபினருக்கு  இணக்கம்  தெரிவித்திருந்தார்.

எழுத்துமூல வாக்குறுதிகளை அடுத்தே கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரித்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழைமை போன்று கப்பம் கொடுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றி கொண்டார். அகவே இவர்கள் அரசாங்கத்தை கப்பம் மூலமாகவே காப்பாற்றியுள்ளனர். இவர்களுக்கு இல்லையென்றால் 119 வாக்குகள் கிடைதிருக்காது என்றார்.