பொதுஜன பெரமுனவிடம் தனித்துவத்தை இழந்து அடிமையாக பிச்சை கேட்க முடியாது- தயாசிறி

349 0

கட்சியின் தனித்துவங்களை இழந்து, அடிமையாக மஹிந்த ராஜபக்ஸவின் காலில் மண்டியிட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு முடியாது எனவும், இந்த உண்மையைக் கூறியதனாலேயே எனக்கு எதிராக சிலர் பேச ஆரம்பித்துள்ளனர் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார்.

தெஹிவளையில் ஸ்ரீ ல.சு.க.யின் கிளையை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

52 நாள் அரசாங்க மாற்றத்தின் போது மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராகவும், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகவும் ஏற்க முடியுமான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினருக்கு ஏன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் இதே மாற்றத்தைச் செய்ய முடியாது. இந்த மாற்றத்துக்குத் தயார் என்றால், நாம் அனைவரும் துணிந்து வேளை செய்து வெற்றி பெற தயாராவோம்.

இல்லாமல், கூட்டணி அமைக்க பேரம் பேசாமல், தனித்துவத்தை விட்டுக் கொடுத்து அடிமைபோன்று ஆதரவு வழங்க தாம் ஒருபோதும் தயாரில்லை.

ராஜபக்ஸாக்கள் வேண்டாம் என்றுதான் 2015 இல் நாட்டு மக்கள் வாக்களித்தனர். இதே தவறை மீண்டும் செய்யப் போகிறோமா? எனவும் கேள்வி எழுப்பினார். அனைத்துப் பொறுப்புக்களும் ராஜபக்ஸாக்களுக்குக் கொடுத்த பின்னர், நாட்டின் ஜனாதிபதியாக இருந்த கட்சியின் தலைவருக்கு என்ன பொறுப்பை வழங்கப் போகிறார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.