‘ போகம்பர தீர்மானங்கள் ‘ இன்று

236 0

வரலாற்று முக்கியத்துவம் மிக்க ‘ போம்பர தீர்மானங்கள் ‘ என்ற 7 தீர்மானங்களை மகாநாயக்க தேரர்களின் செய்தியுடன் பொது பல சேனா அமைப்பு நிறைவேற்றவுள்ளது. 

இன்று பகல் 2 மணிக்கு கண்டி – போகம்பர மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டிலேயே இந்த 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று பொது பல சேனா தெரிவித்துள்ளது. ‘ ஒரே நாடு – ஒரே மக்கள் – ஒரே சட்டம் ‘ என்ற தொனிப்பொருளின் கீழ் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இலங்கையின் பிரதான பௌத்த பீடங்களின் பணிவிடைகளும் அறிவிக்கப்படவுள்ளது.

ஆயிரக்கணக்கான பௌத்த பிக்குகள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படும் இம்மாநாடு இலங்கை அரசியலிலும் தாக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்களில் பெரும்பாலானவை இஸ்லாமிய அடிப்படைவாத்திற்கு எதிரானவையாகவே இருக்கும் என்றும் பொது பல சேனா தெரிவித்துள்ளது.

நாட்டில் வியாபித்திருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பிரச்சினைக்கு முறையாகத் தீர்வுகாணும் நோக்கில் நாட்டுமக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டின் பின்னர், வெளிநாட்டு உளவுப்பிரிவொன்றினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சதித்திட்டமொன்று தொடர்பில் அம்பலப்படுத்துவோம் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எனவே இந்த மாநாடு மாத்திரமின்றி , மாநாடு நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் நாட்களும் எதிர்பார்ப்பு மிக்கதாகவே இருக்கும்.

இது இவ்வாறிருக்க ,  பொது பல சேனா அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது என்றும், இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பெறுமளவில் தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாசபை – கண்டி கிளை குற்றம் சுமத்தியுள்ளது.

எனவே இந்த சூழ்நிலையை கருத்திற் கொண்டு இன்று அத்தியாவசிய தேவை இன்றி கண்டி நகருக்கு வருகை தருவதையும் , கண்டி நகர் ஊடாக பயணம் செல்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு உலமாசபை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.