*எமக்குள் பிளவுகள் இல்லை எதிர்கொள்ளத் தயார்: ஐ.தே.க
*கடமை தவறியவர்களை வீட்டுக்கு அனுப்ப ஒன்றிணையுங்கள்: ஜே.வி.பி
*மஹிந்த, மைத்திரி அணிகளும் ஆதரவளிப்பதற்கு தீர்மானம்
*ஹக்கீம், ரிஷாத் எதிர்ப்பு: கூட்டமைப்பு கூடிப்பேசுமாம்
ஏப்ரல் 21ஆம் திகதி இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலைத் தடுப்பதற்கும், நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கும் தவறியமை மற்றும் தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்று 21 நாட்களின் பின்னர் இனமொன்றை குறிவைத்து நடத்தப்பட்ட இனரீதியான வன்முறைகளைத் தடுக்கத் தவறியமை ஆகிய காரணங்களை முன்வைத்து மக்கள் விடுதலை முன்னணி இந்த நம்பிக்கையில்லாப்பிரேரணையை சமர்ப்பித்துள்ளது.
இந்நிலையில் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்வது தொடர்பில் ஆளும் தரப்பினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் குறித்த பிரேரணைக்கு ஆதரவளித்து ஐ.தே.முன்னணி தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்குரிய முனைப்புக்களை எதிர்த்தரப்பினரும் முன்னெடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக அரசியல் தரப்புக்கள் சில தீர்மானங்களை எடுத்துள்ள நிலையில் மேலும் சில தரப்புக்கள் அடுத்துவரும் தினங்களில் இறுதி முடிவுகளை எட்டவுள்ளதாக அறிவித்துள்ளன. அவ்விடயங்கள் வருமாறு,
எமக்குள் பிளவுகள் இல்லை எதிர்கொள்ளத் தயார்: ஐ.தே.க
சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கையில், அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்வதற்கு தயாராகவே இருக்கின்றோம். அதனை நிச்சயமாக தோல்வியடைச் செய்வோம். அதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து விட்டோம் என்றார்.
மேலும், ஐக்கிய தேசிய முன்னணியின் கிறிஸ்தவ சமயத்தினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்படி பிரேரணைக்கு ஆதரவளிப்பது அல்லது வாக்கெடுப்பில் பங்கேற்காது விடுவது பற்றி ஆராய்ந்து வருவதாக வெளியான தகவல்கள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், அவ்வாறான எந்த பிளவுகளும் எமது கட்சிக்குள்ளோ அல்லது பங்காளிக்கட்சிகளுக்குள்ளோ கிடையாது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக செயற்படுவோம். ஜனநாயகமும் உண்மையும் ஒருபோதும் மடிந்து விடாது என்றார்.
கடமை தவறியவர்களை வீட்டுக்கு அனுப்ப ஒன்றிணையுங்கள்: ஜே.வி.பி
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கையில், அடிப்படைவாத பயங்கரவாதிகளால் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று புலனாய்வுப் பிரிவினரும், சர்வதேச புலனாய்வுத் தரப்புக்களும் எச்சரித்திருந்தபோதும் அதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மக்கள் ஆணைபெற்ற ஆட்சியாளர்கள் நாட்டு மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர்.
ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றன. அதன் பின்னர் 21 நாட்களில் குறித்த இனத்தவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வன்முறைகளைத் தடுப்பதற்கும் ஆட்சியாளர்கள் தவறியிருந்தனர்.
இந்தச் சம்பவங்கள் நடந்தேறும் போது நாட்டின் பிரதான ஆட்சியாளர் நாட்டிலேயே இல்லை. இவ்வாறான நிலையில் தற்பொழுது நாட்டை ஆட்சி செய்பவர்களுக்குத் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்குத் தார்மிக உரிமை இல்லை. இதனை மனதில் கொண்டு எமது பிரேரணைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும். குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சியின் கிறிஸ்தவ உறுப்பினர்கள் சிந்தித்து செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
மஹிந்த, மைத்திரி அணிகளும் ஆதரவளிப்பதற்கு தீர்மானம்
அரசாங்கம் பொறுப்புக்கூறலிலிருந்து விலகியமையை மையப்படுத்தி அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் இந்தப்பிரேரணையை ஆதரவளிப்பது என்று எமது அணி தீர்மானித்துள்ளது என மஹிந்த அணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்ஸா தெரிவித்தார்.
அதேநேரம், அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு யார் அல்லது எந்த கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தாலும் எவ்வித கட்சி பாகுபாடுமின்றி நாம் அதற்கு ஆதரவு வழங்குவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவும் குறிப்பிட்டார்
மேலும், அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணையை நாம் ஆதரிக்கும் முடிவிலேயே இருக்கின்றோம். இருப்பினும் அடுத்து வரும் நாட்களில் எமது கட்சியின் தலைமையுடன் கலந்துரையாடியே இறுதி முடிவினை அறிவிப்போம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அணியின் சார்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான, தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஹக்கீம், ரிஷாத் எதிர்ப்பு கூட்டமைப்பு கூடிப்பேசுமாம்
அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக அதன் உயர்மட்டத்தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதேநேரம், சமகால விடயங்களை கருத்திற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் செவ்வாய் அல்லது புதன்கிழமை பாராளுமன்றக்குழுவை கூட்டி கலந்துரையாடியே இறுதி முடிவினை எடுக்கும் என்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அதேநேரம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம், ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் அடுத்துவரும் நாட்களிலேயே தீர்மானிக்கவுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

