சந்தன கடத்தல் வீரப்பனின் 12 ம் ஆண்டு நினைவு நாள்

303 0

1-2சந்தன கடத்தல் வீரப்பனின் நினைவு நாளையொட்டி அவரதுமனைவி முத்துலட்சுமி மகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம்தேதி தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தமிழக அதிரடிப்படை போலீசாரால் வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, வீரப்பனின் உடல் மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.ஆண்டுதோறும் வீரப்பன் நினைவு நாளில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியும் அவரது உறவினர்களும் மூலக்காட்டிற்கு வந்து வீரப்பன் அஞ்சலி செலுத்துவர்.

இன்று வீரப்பனின் 12 ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனிடையே, வீரப்பன் குறித்த வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள், பேனர்கள் வைக்கவும், அந்த இடத்தில் உணவு வழங்கவும் போலீசார் தடை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இன்று முத்து லட்சுமி தனது குடும்பத்தாருடன் வீரப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். கர்நாடகத்திலிருந்தும், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல்வேறு அமைப்பினர் வந்து அஞ்சலி செலுத்தி சென்றார்கள்.

இது குறித்து வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கூறும்போது,வருடந்தோறும் தனது கணவருக்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம், ஆனால் இதற்கு தடை விதித்ததால் இதனை எதிர்த்து தான் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், நிச்சயம் நீதிமன்றம் தனக்கு ஆதரவாக தீர்பளிக்கும் என நம்பியுள்ளதாக தெரிவித்தார்.