எதிரணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே தீர்மானம்- தினேஸ்

357 0

ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணி அமைப்பதா? இல்லையா? என்பது தொடர்பிலும், போட்டியிடும் சின்னம் எது என்பது பற்றியும் தீர்மானம் எடுப்பது கூட்டு எதிரணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே ஆகும் எனவும் அதற்கு முன்னர் விடுக்கப்படும் அறிவிப்புக்களை ஏற்க முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன கூட்டணி தொடர்பில் அவரிடம் வினவியதற்கே இதனைக் கூறினார்.

எதிர்வரும் 9 ஆம் திகதி கூட்டு எதிரணியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுச் சின்னம் ஒன்றுக்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பானது செல்லுபடியற்றது என  விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுன கட்சி தெளிவாக மறுத்திருந்தது. தேர்தல் குறித்த பொதுவான தீர்மானங்கள் கூட்டு எதிரணியின் கலந்துரையாடலுடன்தான் முன்னெடுக்கப்பட வேண்டும் என அக்கட்சியிலுள்ள முக்கிய உறுப்பினர்கள் அறிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.