அரசியல் பலம் இல்லாமல் எமக்கு எதுவும் கிடைக்காது – வேலுகுமார்

320 0

அரசியல் பலம் இல்லாது தமிழர்களுக்கு அபிவிருத்தி நன்மைகள் உள்ளிட்ட எதுவும் கிடைக்காது என  நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தை மக்கள், தமிழரின் அரசியல் பலத்தை அதிகரிக்கும் வகையில் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி, கந்தகிட்டிய தமிழ் வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டுமாடிக் கட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “கண்டி மாவட்டத்திலுள்ள தமிழ் பாடசாலைகள் கடந்த காலங்களில் அபிவிருத்தியின்போது ஓரங்கப்பட்டன. எனவே, தமிழ் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் தமிழ் பாடசாலைகளை வளப்படுத்துவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொதுத் தேர்தலின்போது உறுதியளித்தோம்.

அந்தவகையில் இரு தசாப்தங்களுக்கு பிறகு தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் மக்களின் ஆதரவில் கிடைத்தது.

அன்று உங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் பிரதான விடயங்களை குறுகிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றியுள்ளோம். மேலும் பல விடயங்களை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.

வாக்குரிமை மூலம் மக்கள் வழங்கிய பேரம் பேசும் சக்தியாலேயே எம்மால் இவற்றை செய்யக்கூடியதாக இருந்தது. அரசியல் பலம் இல்லாதுவிட்டால் எமக்கு எதுவுமே கிடைத்திருக்காது என்பதே உண்மையாகும்.

வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதம் மக்கள் வசம் இருக்கின்றது. எனவே, தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை கண்டி மாவட்டத்தில் தக்கவைத்து மேலும் பலப்படுத்துவதற்கு மக்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்.

அரசியல் பலத்தை இல்லாமல் செய்யவே பேரினவாதிகளின் ஒப்பந்தத்தை ஏற்று எங்களைச் சூழவுள்ளவர்களே துரோக அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.  எனவே, துரோகச் செயல்களுக்கு கண்டிவாழ் தமிழர்கள் என்றும் துணைபோகமாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது” என்று தெரிவித்தார்.