மகளின் திருமணத்துக்காக பரோல் கேட்டு மனு – ஐகோர்ட்டில் நளினி இன்று ஆஜர்

441 0

மகளின் திருமணத்துக்காக பரோல் கேட்டு மனு அளித்துள்ள நளினி இன்று சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகிறார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் இருப்பவர் நளினி. இவர், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘என்னுடைய மகள் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவருக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும். எனவே, எனக்கு 6 மாதம் ‘பரோல்’ வேண்டும் என்று சிறைத்துறை தலைவர், வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை என் மனுவை பரிசீலிக்கவில்லை. கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் எனக்கு 6 மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் நேரில் ஆஜராகிவாதிட எனக்கு அனுமதி வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல்குமார் ஆகியோர் முன்பு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, நளினியை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதை நீதிபதிகள் ஏற்க வில்லை. நளினிக்கு நேரில் ஆஜராகிவாதிட உரிமை உள்ளது என்று கருத்து கூறினர். பின்னர், நளினி சிறையில் இருந்தபடி இந்த வழக்கில் காணொலி காட்சி மூலம் வாதிட விருப்பமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு கடந்த 24-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘நளினி காணொலி காட்சி மூலம் வாதம் செய்ய விருப்பம் இல்லை என்றும் ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி வாதிடவே விருப்பம் என்றும் வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு எழுத்துப் பூர்வமாக கடிதம் கொடுத்துள்ளார்’ என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள், ‘அப்படி என்றால், நளினியை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்று கூறினர். அதற்கு அரசு வக்கீல், நளினி ஆஜரானால், அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டியது வரும். 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்த வேண்டியது வரும்’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் நளினி, நேரில் ஆஜராகிவாதிடவே விருப்பம் என்று கடிதம் கொடுத்துள்ளதாக அரசு வக்கீல் கூறுகிறார். நளினியின் விருப்பத்தை இந்த ஐகோர்ட்டு நிராகரிக்க முடியாது. வக்கீல்கள் என்பவர், தங்களது கட்சிக்காரர்களின் பிரதிநிதிகள் தான்.

அதேநேரம், தன்னுடைய வழக்கில் வக்கீல் இல்லாமல் தானே ஆஜராகிவாதிட கட்சிக்காரர் ஒரு கோரிக்கை விடுக்கும்போது, அந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிக்க முடியாது. அதே நேரம், நளினியை ஆஜர்படுத்தும்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று அரசு தரப்பில் கூறினாலும், அந்த அச்சத்துக்கு ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை.

நளினியை பாதுகாப்புடன் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ளலாம். நளினியும், சிறை விதிகளை மீறாமல், போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

எனவே, வருகிற ஜூலை 5-ந்தேதி மதியம் 2.15 மணிக்கு நளினியை ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இதன்படி நளினி இன்று ஜகோர்ட்டில் ஆஜராகிறார். இதற்காக பலத்த பாதுகாப்புடன் அவர் வேலூர் சிறையில் இருந்து அழைத்து வரப்படுகிறார். பரோல் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவில் மகளின் திருமணத்தை கருத்தில் கொண்டே வெளியில் வர இருப்பதாக நளினி குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஆஜராகும் அவர் தானே கோர்ட்டில் வாதாட இருப்பதாகவும் கூறியுள்ளார். கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி பலமுறை இதற்கு முன்பு வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகி உள்ளார்.

இப்போது ஆஜராவதற்கும் அதற்கும் நிறையவேறுபாடுகள் உள்ளன. இன்று ஆஜராகும் அவர் பரோலில் வெளிவருவதற்காக நானே வாதாடுவேன் என்று கூறியிருப்பதால் அவரது வாதம் என்ன? என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.