வெளிநாட்டு படைகளின் தளங்களுக்கு இலங்கையில் இடமில்லை -ருவன்

308 0

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எதனையும் கைச்சாத்திடும் திட்டம் அரசாங்கத்திற்கு இல்லை. அமெரிக்காவிற்கு மாத்திரமல்ல, வேறெந்தவொரு நாடும் இலங்கைக்குள் இராணுவத்தளம் ஒன்றை அமைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.

அத்தோடு ஐக்கிய அமெரிக்காவின் இராணுவத்தினர் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கும், இங்கு இராணுவத்தளம் ஒன்றை அமைப்பதற்கும் அனுமதியளிக்கும் விதமாக ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாகக் கூட்டு எதிரணியும், வேறுசில தரப்பினரும் முன்வைத்துவரும் குற்றச்சாட்டுக்களையும் அவர் முற்றாக நிராகரித்தும் உள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்து இன்று ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் இராஜாங்க அமைச்சர், அமெரிக்காவுடனான சர்ச்சைக்குரிய ஒப்பந்த விவகாரம் தொடர்பில் ஏற்கனவே பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியிருந்ததாகவும், அமெரிக்காவுடன் இத்தகைய ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திடும் உத்தேசம் எதுவும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அவ்வறிக்கையில் உறுதியாகக் கூறியிருக்கிறார்.