மதூஷ் நெறிப்படுத்திய நான்கு பாரிய குற்றங்கள் தொடர்பில் விசாரணை!

282 0

பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷ் டுபாயில் இருந்து நெறிப்படுத்தியதாக கூறப்படும் பிரதான பாரிய குற்றச் செயல்கள் நான்கு தொடர்பில் தற்சமயம் சி.ஐ.டி. விஷேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

2017.02.27 அன்று களுத்துறை, எத்தனமடல பகுதியில் சிறைச்சாலை பஸ் வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இரு சிறச்சாலை அதிகாரிகள், சமயன் உள்ளிட்ட ஐந்து பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் என 7 பேரைக் கொலை செய்து மேலும் நான்கு சிறைச்சாலை அதிகாரிகளை காயப்படுத்தியமை, 2017.05.09 அன்று  பிலியந்தலை நகரில் போதைப் பொருள் சுற்றி வளைப்புக்கு சென்ற பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவரைக் கொலை செய்தமை மேலும் இரு பொலிசார் உட்பட நால்வருக்கு காயம ஏற்படுத்தியமை, 2018.3.06 அன்று களனிமுல்லே கொஸ்மல்லி எனும் பாதாள உலக உறுப்பினரைக் கடத்திச் சென்று அங்குனுகொலபெலஸ்ஸவில் சுட்டுக் கொலை செய்த பின்னர் அவரது தலையை புதுக்கடை பகுதிக்கு எடுத்து வந்து கைவிட்டு சென்றமை, 2018.11.08 ஆம் திகதி  பன்னிப்பிட்டிய – அரவ்வல பகுதியில்  பல கோடி ரூபா மதிப்பு மிக்க வைரக்கல் ஒன்றினை கொள்ளையிட்டமை ஆகிய நான்கு சம்பவங்கள் தொடர்பிலேயே தற்போது விசாரணைகள் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில், தற்போது மாகந்துரே மதூஷின் தொலைபேசி இலக்கம், இக் குற்றங்களில் பங்கேற்ற அவரது சகாக்களின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் தொலைபேசி இலக்கங்களை மையபப்டுத்தி விஷேட பகுப்பாய்வுகள் இடம்பெறுவதாகவும், மதூஷின் தொடர்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கைகள் ஒடம்பெறுவதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.

மேலும் மதூஷிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவரால் ஒழித்து வைக்கப்பட்டிருந்த மூன்று துப்பாக்கிகள் சி.ஐ.டி.யினரால் இதுவரை மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.