சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பலி

235 0

சிரியா மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், அப்பாவி பொதுமக்கள் 4 பேர் பலியானதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இயங்கி வருவதாக கூறி அந்த நாட்டின் மீது ஈரான் தொடர்ந்து, வான்தாக்குதலை நடத்தி வருகிறது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா, தங்களின் ராணுவநிலைகளை குறிவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதலை நடத்துவதாக குற்றம் சாட்டி வருகிறது.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரவு தங்கள் நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் பலியானதாகவும் சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சிரியா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் நகரங்களில் உள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசியதில் ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். அதே சமயம் 6 ஏவுகணைகள் நடுவழியிலேயே இடைமறிக்கப்பட்டு, வெற்றிக்கரமாக அழிக்கப்பட்டன. இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.