இந்து சமய அறநிலையத்துறையின்கோவில் பணியாளர்களுக்கு சம்பள உயர்வுஅரசாணை வெளியீடு

245 0

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சம்பளம், படிகள் ஆகியவற்றை உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி அரசுப் பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய விகிதம் மற்றும் இதர படிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் மாநில அரசு பணியாளர்களுக்கு பின்பற்றப்பட்ட முறையை பின்பற்றி தற்போதுள்ள ஊதிய அமைப்பு மற்றும் தர ஊதியம் என்பதை நீக்கி அதற்கு பதிலாக புதிய ஊதிய அட்டவணை இணைக்கப்படுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியன்று ஊதிய அமைப்பு முறையில் பெற்ற ஊதியம் மற்றும் தர ஊதியம் ஆகியவற்றை 2.57 காரணியால் பெருக்கி வரும் தொகையின் அடிப்படையில் ஊதிய நிர்ணயம் செய்யலாம்.
வாடகைப்படி இரட்டிப்பு
அதுபோல திருத்திய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி 2 சதவீதத்தில் இருந்து 12 சதவீதம் வரை நிர்ணயிக்கப்படுகிறது. ஆண்டு ஊதிய உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு ஆகியவையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. கோவில் பணியாளர்களுக்கான வீட்டு வாடகைப்படியும் இரட்டிப்பாக உயர்வு செய்து வழங்கப்படும்.
அதுபோல கோவிலுக்கு சொந்தமான வீடுகளில் வசிக்கும் கோவில் பணியாளர்களுக்கு வாடகை பிடித்தம் செய்யப்படும். திருத்திய வாடகைப்பிடி, ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும். நகர ஈட்டுப்படியும் இரட்டிப்பாக உயர்த்தப்படும். மருத்துவப்படியும் உயர்த்தப்பட்டு மாதமொன்றுக்கு ரூ.150 வீதம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளியாக உள்ள பணியாளர்களுக்கு சிறப்பு ஊர்திப்படி ரூ.500 வழங்கப்படும்.
உச்சவரம்பு
கோவில்களுக்கான உதவித்தொகை நிர்ணய வருமானத்தில் பணியாளர்களுக்கான சம்பளச் செலவுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்படுகிறது. சமயபுரம் கோவிலுக்கான உச்சவரம்பு 10 சதவீதம்; பழனி, திருச்செந்தூர், திருத்தணி கோவில்களுக்கு 20 சதவீதம்;
இணை ஆணையர், செயல் அலுவலர் நிலையில் உள்ள கோவில்களுக்கு 25 சதவீதம்; துணை ஆணையர் நிலையில் உள்ள கோவில்களுக்கு 30 சதவீதம்; உதவி ஆணையர் நிலையில் உள்ள கோவில்களுக்கு 35 சதவீதம்; முதுநிலையல்லாத கோவில்களுக்கு 40 சதவீதம் என உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்படுகிறது.
தேவையற்ற பணியிடம் நீக்கம்
ஓய்வு பெறும்போது வழங்கப்பட்டு வரும் 180 நாள் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, 210 நாட்கள் என்று ஜூலை 1-ந் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும். பயோமெட்ரிக் முறையில் வருகைப் பதிவேடு இல்லாத கோவில்களிலும் அந்த முறையை கொண்டு வந்து, அதன் அடிப்படையில் சம்பளம் வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
சூழ்நிலைக்கேற்ற படி இதர பணியிடங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தேவையான பணியிடங்களை ஏற்படுத்தவும், தேவையற்ற பணியிடங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
கோவில்களில் பணித்தன்மை வேறுபாடாக உள்ளன. எனவே தனித்தனியே பல்வேறு நிலையில் வருமானம் மற்றும் பணித்தன்மை உள்ள கோவில்களில் பணியாளர்களுக்கு பொதுவான சம வேலை சம ஊதியம் என்பதை நிர்ணயிக்க முடியாது. அதுபோல பணித்தன்மை, பணித் தேர்வு முறை ஆகியவற்றில் வித்தியாசம் இருப்பதால் கோவில் பணியாளர்களை அரசுப் பணியாளர்களுடன் ஒப்பிட முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.