சுயாதீனமாக செயற்பட வேண்டிய அனைத்து துறைகளிலும் அரசியல் தலையீடு காணப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“கடந்த ஆட்சிக்காலத்தில் நீதித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் சுயாதீனமாக இயங்கவில்லையென பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.
ஆனால் நாம், பிரதம நீதியரசரை பதவி நீக்க நாடாளுமன்றத்தில் பிரத்தியேக குழுவொன்றை நியமித்திருந்தோம்.
அதேபோன்று ஏனைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் முறையான வழிமுறைகளையே நாம் பின்பற்றினோம்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் முறையான வழிமுறைகள் எதனையும் பின்பற்றாமல் முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை பதவி நீக்கியது
மேலும் சட்டமா அதிபரை வீடுகளுக்கு அழைத்து சில அமைச்சர்கள் உரையாடுகின்றனர்.
இவ்வாறு எந்ததொரு செயற்பாடுகளிலும் முறையாக வழிமுறைகளை பின்பற்றாமல் தான்தோன்றித்தனமாக அரசு செயற்படுகின்றது.
இதேவேளை எமது சட்ட நடவடிக்கைகளில் அமெரிக்காவின் தலையீடு அதிகம் காணப்படுகின்றது.” எனவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

