நாட்டிற்கு சிறந்த தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டிய கடமையும் மக்களுக்கே உள்ளது – சஜித்

328 0

நாட்டின் அடுத்தத் தலைவராக முதலாளியொருவரை அன்றி, சேவையாளர் ஒருவரையே மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

புத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “சமாதானத்தையும் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் எவ்வாறு கட்டியெழுப்ப வேண்டும் என நாம் சிந்திக்க வேண்டும்.

இதற்கு நாம் அனைவரும் முதலில் ஒன்றிணைந்து ஒரு கட்டமைப்பின் கீழ் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். பிரச்சினைகள் வரும்போது, முடிந்தளவு பேச்சுவார்த்தைகளின் ஊடாக அதனை நிவர்த்தி செய்ய நாம் முற்பட வேண்டும்.

சமாதானமும் சகோதரதத்துவமும்தான் ஒரு நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல பெரும் பங்கு வகிக்கும். எமது நாட்டில் என்றும் அடிப்படைவாதத்துக்கு இடமில்லை. நாம் அடிப்படைவாதத்தை தோற்கடிக்க வேண்டும்.

இதனைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் மதங்களையோ அல்லது இனங்களையோ தோற்கடிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.  இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இனவாதத்தாலும் அடிப்படைவாதத்தாலும் எந்தவொரு காரியத்தையும் சாதித்து விடமுடியாது.

அத்தோடு, நாட்டிற்கு சிறந்த தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டிய கடமையும் மக்களுக்கே உள்ளது. நாட்டின் அடுத்தத் தலைவராக சேவையாளர் ஒருவரை நியமிக்க வேண்டுமே ஒழிய முதலாளியொருவரை நியமிக்கக்கூடாது.

ஏனெனில், இவ்வளவு காலம் முதலாளியொருவருக்கு நாட்டின் தலைமைத்துவத்தைக் கொடுத்து நாட்டுக்கு நேர்ந்த கதியை அனைவரும் உணர்ந்திருப்பார்கள்.

இவ்வாறான சுயநலமிக்க தலைவர்களை இனியும் நியமித்தால், அது நிச்சயமாக நாட்டின் எதிர்காலத்திற்கே ஆபத்தாகிவிடும்” என மேலும் தெரிவித்துள்ளார்.