வேலைநிறுத்தத்தை கைவிட தீர்மானம்

282 0

களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தை இன்று காலை 8 மணியுடன் நிறைவுக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளனர்.

வைத்தியர்களின் பாதுகாப்பிற்கு எவ்வித சிக்கலும் வராமல் இருப்பின் வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

நேற்று காலை நாகொட வைத்தியசாலை பகுதியில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமையில் மனு ஒன்றுக்கு கையொப்பமிடப்பட்ட போது  வெளியிலிருந்து வந்த சிலர் அதற்கு இடையூறு விளைவித்தமையைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதன் போது பாதுகாப்புப் பிரிவினர் நடந்து கொண்ட முறை தொடர்பில் குற்றம் சுமத்தி நேற்று மதியம் 12 மணி முதல் களுத்துறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியர்களும் அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இன்று பொலிஸ் ஆணைக் குழுவிற்கு மற்றும் பதில் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.