மக்களையும் நேசிக்க கூடியதலைமைத்துவத்துடனான அரசாங்கமொன்றை உருவாக்குவோம்-மஹிந்த

400 0

அசாங்கத் தரப்பினர் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரியவில்லை. எதிர்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறாது  என்று  அரசாங்கத்தரப்பில் இருந்து இன்னும் நம்பகத்தன்மையான கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.

இன்னும்  நான்கு  மாதங்களில்  இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருகிறது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மக்களின் பாதுகாப்புக்கு சிறப்புரிமை கொடுக்கும் நாட்டையும் மக்களையும் நேசிக்க கூடியதலைமைத்துவத்துடனான அரசாங்கமொன்றை உருவாக்குவோம் என்று எதிர்க்கட்சி தலைவர்  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று இரண்டு மாத பூர்த்தியை முன்னிட்டு  நேற்று கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் எதிரணியினரால் ஏற்பாடுசெய்ப்பட்டிருந்த விசேட நினைவேந்தல் நிகழ்வு எதிர்கட்சி தலைவரின் தலைமையில் இடம்பெற்றது.  இந்த நிகழ்வில்  தேசிய சுகந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச,  பாராளுமன்ற  உறுப்பினர் உதய கம்பன்பில, மறிங்நதானந்த அலுகமகே உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் அங்கு மேலும் கூறியதாவது;

எதிர்வரும் நான்கு  மாதங்களில் இந்த அரசாங்கத்தின் ஆட்சி காலம் நிறைவடைகிறது. இந்த நான்கு மாதங்களுக்கு பின்னர்  கட்டாயம்  தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.  தேர்தல்களுக்கு  களமிறங்குவது  அவசியமாகும் . மாகாணபைகளுக்கான தேர்தலே முதலில் இடம்பெற வேண்டும்.

ஆனால்  அரசாங்கம்  இந்த தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கை எமக்கு கிடையாது.  முதலில் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறவுள்ளது.  ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நாங்கள் உருவாக்கும் அரசாங்த்தில்  நிச்சயமாக மக்களின்  பாதுகாப்புக்கு முக்கிய இடம் வழங்கப்படும். தேசிய பாதுகாப்புக்கு முக்கிய இடத்தை வழங்கும் வகையிலேயே எங்களின் அரசாங்கம் அமையும்.

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று  2 மாதங்கள் நிறைவடைகின்றது. இந்த தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை நடவடிக்கைகள் இன்னும் இயல்பு நிலைமைக்கு திரும்ப வில்லை.

அரசாங்கம் இது தொடர்பில் பொறுப்புடன் செயற்படுவதாக தெரியவில்லை.பொறுப்புக்களை அடிமட்ட அதிகாரிகளிடம் விட்டு விட்டு அரசாங்கம் தன்னை பாதுகாத்து கொள்ளவே முயற்சித்து வருகிறது.

எதிர்காலத்தில்  இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது  என்பதற்கு சாதகமானதும் நம்பிகையானதுமான எந்த  கருத்தும் இன்னும் அரசாங்கத்தரப்பில் இருந்து வெளியாக வில்லை. சிலர் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து விட்டதாகவும் குறுகிய காலத்தில்  தாங்களே பயங்கரவாத செயற்பாடுகளை முழுமையாக  கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் மார்த்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால் அரசாங்கத்தரப்பில்  பீல்ட்  மார்ஷல் சரத் பொன்சேகா பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைளில் அனுபவம் பெற்றவராக இருக்கிறார்.

இந்த நிலையை அவ்வளவு விரைவாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியாது என்றும், கட்டுபடுத்தாவிட்டால் மீண்டும் தாக்குதல்களை சந்திக்க நேரிடும்  என்றும் அவர்  எச்சரிக்கிறார்.

இவ்வாறானவொரு நிலையில்  சகலரும் அச்சத்துடன் தமது அன்றாட வாழ்ககை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது.சிலரின் செயற்பாடுகளின் காரணமாக முழு முஸ்லிம் சமுகத்தின் மீதும் நம்பகமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.

இவர்களின் செயற்பாடுகளினால் முஸ்லிம் சமுதாயமே பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. இவ்வாறானவொரு நிலையில்  முஸ்லிம் சமய தலைவர்களுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் முக்கிய பொறுப்பு காணப்படுகிறது. சமுதாயத்தில்  இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை மீண்டும் உருவாகாத வகையிலும்  இவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் இருப்பார்களாக இருந்தால் அவர்களுக்கு புனர்வாழ்வை பெற்றுக்கொடுப்பதும் அவர்களின் முக்கிய பொறுப்பாக காணப்படுகிறது.

சமூகத்தில்  ஏற்பட்டுள்ள அச்சநிலைமை போக்கி  இயல்பு நிலையை உருவாக்குவதில் அரசாங்கத்துக்குப் பாரிய பொறுப்பு உள்ளது.  ஆனால் அரசாங்கம் அந்த பொறுப்பை சரியாக நிறைவேற்றுகின்றதா என்ற சந்தேகமும் எமக்கு ஏற்பட்டுள்ளது. மாறாக எங்களையே அரசாங்க தரப்பு குற்றவாளியாக பார்க்கிறது. இந்த நிலைமைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

முப்பது வருடகால யுத்தத்தை நிறைவுக்கு  கொண்டுவந்து பத்து வருடங்கள் முழுமையடைவதற்கு முன்னர் மீண்டும்  பயங்கரவாத தாக்குதல்களை சந்திக்க நேர்ந்துள்ளது.

குறைந்தது  பத்த வருட காலமாவது நாட்டின் அமைதியை பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.இந்த தாக்குதல்கள் தொடர்பான விபரங்கள் ஏப்ரல் நான்காம் திகதி அரசாங்கத்துக்கு கிடைகக்ப்பெற்றுள்ள போதிலும் அந்த முன் அறிவித்தல்கள் தொடர்பில்  அரசாங்கம் எந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கமால்  இருந்திருக்கிறது.

சம்பந்தப்பட்ட தகவல்கள் பொறுப்பான அதிகாரிகளுக்க கையளிக்கப்பட்டுள்ள போதிலும்  அது குறித்தும் கவனம் செலுத்தாமலேயே அரசாங்கத்தினர் செயற்பட்டுள்ளனர்.

நாட்டின் எதிர்காலம் தொடர்பில்  எதிர்க்கட்சிக்கும் பாரிய பொறுப்பு இருக்கிறது. அதனை செய்யவே நாங்கள் முயற்சிக்கிறோம் என அவர் இதன் போது தெரிவித்தார்.