கல்முனை வடக்கு தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கடந்த 5 நாட்களாக பௌத்த துறவியுட்பட 5 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாக்குறுதி நிறைவேறும் வரை நீராகாரம் அருந்தியவாறு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து உண்ணாவிரதம் இருப்போரின் கோரிக்கைக்கு தீர்வுகாணும் முகமாக பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறித்த பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்நலையில், உண்ணாவிரத போராட்டத்திலீடுபட்டுள்ளவர்களின் கோரிக்கை குறித்து கல்முனை வடக்கு பிரதேச செயலக விடே குழுவுடன் பிரதேச செயலக மண்டபத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
இந்நிலையில், பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசேரர் வழங்கிய வாக்குறுதியையடுத்து, ஞானசார தேரரால் உண்ணாவிரத போராட்டத்திலீடுபட்ட தேரர் உட்பட ஏனையவர்களுக்கு நீர் கொடுத்து உண்ணாவிரதத்தை நிறைவு செய்த போதிலும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் தாம் நீர் ஆகாரத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு வாக்குறுதி நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை தொடர தீர்மானித்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் உண்ணாவிரதத்திலீடுபட்டவர்கள் வைத்திய சிகிச்சைக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கொண்டு செல்லப்பட்டுள்ளனரென எமது செய்தியாளர் தெரிவித்தார்.

