இன்னும் எத்தனை காலம்தான் காங்கிரசுக்கு பல்லாக்கு தூக்குவது என்று தி.மு.க. சார்பில் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை கண்டித்தும், சீராக குடிநீர் வழங்க கோரியும் தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ, தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு எம்.எல்.ஏ. பேசியதாவது:-

மு.க.ஸ்டாலினின் வியூகத்தால் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. நம்முடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இருப்பினும் இன்னும் எத்தனை காலம்தான் காங்கிரசுக்கு பல்லாக்கு தூக்குவது என்று தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். திருச்சி மாவட்டத்திலாவது தி.மு.க. தனித்து போட்டியிட தலைமையை வலியுறுத்துவேன் என்றார்.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு எதிராக கே.என். நேரு பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

