இஸ்லாம் மதம் குறித்த விமர்சனங்களை முன்வைத்த காரணத்தினாலும் வேறு சில சமூக சிந்தனை செயற்பாடுகளை முன்னெடுத்த காரணத்தினாலும் சஹ்ரான் என்னை கொலைசெய்ய திட்டம் தீட்டியிருந்தார்.
இந்த நாட்டின் கல்வி அமைச்சினால் முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்குவழங்கப்படும் புத்தகத்தில் கூட மதத்தை கைவிடுபவரை கொல்ல வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது என மதசார்பற்ற அமைப்பை சேர்ந்த ரிஸ்வின் இஸ்மத் என்ற நபர் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.
இவ்வாறான விடயங்கள் பாடசாலைப் புத்தகங்களில் இருக்கும் நிலையில் பயங்கரவாதி சஹ்ரான் போன்றவர்கள் சிரியாவிலிருந்து வரத்தேவையில்லை. இங்கேயே அதற்கான சூழல் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை வாக்குமூலம் வழங்கிய ரிஸ்வின் இஸ்மத் இந்த காரணிகளை கூறினார்.
அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,
நான் பிறப்பில் முஸ்லிம். எனினும் 2014ஆம் ஆண்டளவில் நான் அந்த மதத்திலிருந்து விலகினேன். இப்போது நான் மத சார்பற்றவன். என்னை ஒரு நாஸ்திகன் என அடையாளபடுத்தலாம். எனது முகப்புத்தகத்தின் ஊடாக இஸ்லாம் மதம் பற்றிய விமர்சனங்களை நான் முன்வைத்திருந்தேன். நான் எனது வாழ்க்கையில் பலவற்றை மதத்திற்காக பங்களித்தவன் என்ற வகையில் நான் அவ்வாறாக எழுதியிருந்தேன். ஆனால் இதற்கு எதிராக எனக்கு கொலை அச்சுறுத்தல்கள் எழுந்தன. அவை முகப்புத்தகங்களின் ஊடாக முன்வைக்கப்பட்டன. அவற்றில் போலிக் கணக்குகளும் காணப்பட்டன. இது தொடர்பில் நான் முதலாவது முறைப்பாட்டை 2016ஆம் ஆண்டிலும் அதன் பின்னர் 2017ஆம் ஆண்டு ஜுலையிலும் ,ஆகஸ்டிலும் செய்திருந்தேன். சைபர் கிரைம் பிரிவிலும் இரண்டு தடவைகள் முறைப்பாடு செய்தேன். அதன் பின்னர் ஏப்ரல் 21ஆம் திகதி குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் எனது வீட்டுக்கு இரண்டு தடவைகள் வந்தனர்.
நான் சரியான முகவரியில் இருக்கின்றேனா அச்சுறுத்தல் இருக்கிறதா என்று பார்த்துச் சென்றனர். பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவுக்கு வருமாறு கூறியுள்ளனர். 2017ஆம் ஆண்டு தெஹிவளையில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சிறுமிகள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக நானும் எனது நண்பரும் தலையிட்டிருந்தோம். இதனை நடத்துபவர் வஹாபிச கொள்கையைக் கொண்ட வைத்தியர் ஒருவர். இது தொடர்பான வழக்கு பதிவுசெய்யப்பட்டு நுகேகொட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை சமூக நீதிக்கான அமைப்புடன் இணைந்து நாம் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினோம். இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக எனது முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தேன். இதனைப் பார்த்து சஹ்ரான் என்னை கொல்லுமாறு கூறி நான்கு பேரை அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஏன் கொலை அச்சுறுத்தல் எனக்கு வந்தது என்பதனை கூற வேண்டுமென்றால் முஸ்லிம் மதத்தை கைவிட்டால் கொல்லப்பட வேண்டும் என கூறப்படுவது மதத்தில் உள்ளதாலாகும். இந்த நாட்டில் கல்வி அமைச்சினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகத்தில் கூட இது குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய புத்தகத்தில் கூட வேறுவிதமாக இது குறிப்பிடப்பட்டுள்ளது. 1981ஆம் திகதி வெளியிடப்பட்ட புத்தகத்தில், தெளிவாக மதத்தை கைவிடுபவரை கொல்ல வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்லாம் மதப் புத்தகத்தில் 9ஆம் மற்றும் 10ஆம் தரத்துக்கான புத்தகங்களில் இந்த விடயம் உள்ளது. 1980 முதல் 1990 வரையான ஆண்டுவரையில் வெளியான புத்தகங்களில் இவை காணப்படுகின்றன. அத்துடன் புதிய புத்தகத்தில் 2015, 2016, 2017ஆம் ஆண்டு வெளியான புத்தகங்களில் அவ்வாறானவர்களை தர்ம துரோகிகளாகப் பார்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதில் பழைய சிங்கள புத்தகத்தில் அந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியர் குழாம் யார் என குறிப்பிடப்படவில்லை. இரண்டு இடங்களில் அது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்லாம் மதத்தை விட்டு விலகியவர் காபீராக பார்க்கப்படுவார் எனவும் சில சந்தர்ப்பங்களில் அதற்கும் கடுமையாக பார்க்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காபீர் என்பது வேற்று மதத்தவர் என்றே அர்த்தம். தமிழ் மொழியிலுள்ள புத்தகத்தில் “மரண தண்டனை” அல்ல “கொலை” என்ற வசனமே உள்ளது. இவ்வாறான விடயங்கள் பாடசாலைப் புத்தகங்களில் இருக்கும் நிலையில் பயங்கரவாதி சஹரான் போன்றவர்கள் சிரியாவிலிருந்து வரத்தேவையில்லை. இங்கேயே அதற்கான சூழல் உள்ளது.
இஸ்லாம் மதத்தை கைவிட்டவர்கள் கொல்லப்படவேண்டும் என குர்ஆனில் கூறப்படவில்லை. எனினும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. நபி கூறியவை, பின்பற்றியவை என்பதே ஹதீஸ் எனப்படுவதாகும். அரசாங்கத்தினால் வெளியிடப்படும் இஸ்லாம் மதப்புத்தகத்தில் இவ்வாறான விடயம் உள்ளடக்கப்படுமாயின், மதரசாக்களில் பயன்படுத்தப்படும் புத்தகங்களில் எந்தளவுக்கு வன்முறை விடயங்கள் உள்ளடக்கப்படும் என நீங்கள் சிந்தித்துப் பார்க்கலாம். என்றார்.

