பிழையான கல்வி முறைமையினாலேயே  முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தலைத்தூக்கியுள்ளது – ரத்தன தேரர்

238 0

பள்ளிவாசல்களில் கற்பிக்கப்படும் பிழையான கல்வி முறைமையினாலேயே  முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தலைத்தூக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் இதுவரை முறையான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குண்டுத் தாக்குதலுக்கு இலங்கான தேவாலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு சீயோன் தேவாலத்திற்கு  அதுரலிய ரத்தன தேரர் விஜயம் செய்திருந்தார்.

இதனையடுத்து தேரர் உள்ளிட்ட குழுவினர், மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயத்திற்கும் விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அதுரலிய ரத்தன் தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “நாடாளுமன்றில் தெரிவுக்குழுவை அமைத்து புலனாய்வாளர்களை வெளியுலகுக்கு காண்பித்து, புலனாய்வுத் துறையை பலவீனப்படுத்தும் செயற்பாட்டையே அரசாங்கம் இன்று மேற்கொள்கிறது. இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.

உயிரிழந்தவர்களின் உயிர்களை எம்மால் மீண்டும் கொடுக்க முடியாது. ஆனால், இந்த சம்பவத்திற்குக் காரணமான அனைத்து விடயங்களும் நாட்டிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும் என்பதுதான் எமது ஒரேயொரு நோக்கமாகும்.

சவுதி அரேபியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ள ஆசிரியர்கள், கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் தங்கியிருந்து மக்களை மூலைச்சலவை செய்யும் செயற்பாட்டையே மேற்கொள்கிறார்கள்.

அதாவது, தனது மதம் சாராத அனைவரையும் விரோதிகளாக சித்தரிக்கும் வகையிலேயே இவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் காணப்படுகின்றன.

இப்படியான கொடூர பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும். இதற்கெதிராக அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பதை மக்கள் மிகுந்த அவதானத்துடன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

தெரிவுக்குழு ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம்.

ஆனால், இன்று நாடாளுமன்றில் அதனை மீறிய ஒரு செயற்பாடே மேற்கொள்ளப்படுகிறது.

நாட்டில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல் தொடர்பில் போதிய தெளிவில்லாமல், புலனாய்வுத் துறையை பலவீனப்படுத்தும் செயற்பாடே இன்று மேற்கொள்ளப்படுகிறது” என மேலும் தெரிவித்துள்ளார்.