அந்­தோ­னி­யாரின் கோலா­க­ல­மற்ற திரு­விழா!

498 0

இன்­றைய திரு­விழா திருப்­பலி காலை 10  மணி­க்கு, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்­கப்­ப­டும் .

ஜூன் மாதம் 13ஆம் திகதி என்­றாலே கொழும்பு கொச்­சிக்­க­டைவாழ்  மக்­களின் மனதில் குதூ­கலம் குடி­கொண்டு விடும். ஆம், அன்­றுதான் கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னி­யா­ருக்குத் திரு­விழா எடுக்கும் நாள்; கோலா­கலம் நிறைந்த நாள்.

கொச்­சிக்­க­டைவாழ் மக்கள் மட்­டும்­தானா…? இல்லை… நாடு முழு­வ­து­முள்ள புனி­தரின் பக்­தர்கள் ஆல­யத்­துக்கு ஓர­ணி­யாகத் திரண்­டு­வந்து கொண்­டாடும்  திரு­விழா இது.

புனித அந்­தோ­னியார்…! 

அவரை நினைத்­தாலே போதும், மனதில் கவ­லைகள், துன்­ப­து­ய­ரங்கள், கஷ்­ட­நஷ்­டங்கள்  எல்­லாமே சூரி­யனைக் கண்ட பனி போல் மறைந்­து­விடும். அத்­தனை அற்­பு­த­மா­னவர் அவர்.  இன, மத பேத­மின்றி அனை­வ­ருக்கும் அருள்­பா­லிப்­பவர்.

பிரதி செவ்­வாய்க்­கி­ழமை தோறும் ஆல­யத்­துக்கு வரும் பிற சமய பக்­தர்­களே இதற்குச் சாட்சி பகர்­கின்­றனர்.

செவ்­வாய்க்­கி­ழமை விடிந்­த­துமே, அன்­றாட கட­மை­களை முடிக்­கி­றார்­களோ இல்­லையோ புனி­தரின் ஆல­யத்தை நோக்கி வந்து அருள் பெறு­ப­வர்கள் ஏராளம். காலை முதல், இரவு 11  மணி வரை ஆல­யத்தில் கூடும் பக்­தர்கள் தாம் எத்­தனை எத்­தனை!

செவ்­வாய்க்­கி­ழமை தோறும் ஆலயம் திரு­விழாக் கோலம் பூண்­டி­ருக்கும். மக்கள் அலை­அ­லை­யாக வந்து போய்க் கொண்­டி­ருப்­பார்கள்.

ஜூன் மாதம் என்­றாலே, புனித அந்­தோ­னி­யாரின் திரு­வி­ழாதான்  கொழும்­புவாழ் மக்­க­ளுக்கு நினை­வுக்கு வரும். நத்தார், புது­வ­ருட பண்­டி­கை­க­ளை­விட, புனி­தரின் திரு­வி­ழாவைக் கொண்­டா­டவே முழு­மூச்­சாகச் செயற்­ப­டுவர்.  ஜூன் 3ஆம் திக­தி­யி­லி­ருந்தே திரு­விழா குதூ­கலம் களை­கட்டி விடும். அன்­றைய தினம் ஆலய வரு­டாந்தத் திரு­வி­ழா­வுக்­கான கொடி ஏற்­றப்­படும்.

ஆல­யத்தில் மட்­டு­மல்ல, ஆலய வட்­டா­ரத்தைச் சுற்றி நூற்­றுக்­க­ணக்­கான கொடி­மரங்கள் நாட்­டப்­படும். ஒரு புனி­தரின் திரு­வி­ழா­வுக்கு இத்­தனை கொடி மரங்கள் ஏற்­றப்­ப­டு­வது இலங்­கை­யி­லேயே கொழும்பு கொச்­சிக்­கடை வட்­டா­ரத்தில் மட்­டும்தான். கொடி­க­ளுடன் வண்ண விளக்­கு­களின் ஒளி வெள்ளம் முழு வட்­டா­ரத்­தையும் சூழ்ந்து நிற்கும்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த குண்­டு­வெ­டிப்பு

இத்­தனை ஆடம்­ப­ரங்­க­ளோடு பொலி­வுடன் காட்­சி­தந்து கொண்­டி­ருந்த  புனி­தரின் ஆலயம் இன்று சோபை இழந்து நிற்­கின்­றது. இதனைப் பார்க்கும் போது வேதனை, மனதைத் துளைக்­கின்­றது.

இந்த வட்­டார மக்­க­ளுக்கு இதை­விட அதிர்ச்சி தரும் சம்­பவம் வேறு எதுவும் இருக்க முடி­யாது.

இலங்­கையில் மட்­டு­மல்ல, உலகம் முழு­வ­தி­லு­முள்ள புனி­தரின் பக்­தர்­க­ளுக்குக் கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் ஆல­யத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்­பவம் பேர­திர்ச்­சி­யையே தந்­தி­ருந்­தது.

தன்னை அண்­டி­வந்த எவ­ரையும் புனித அந்­தோ­னியார் கைவிட்­ட­தாகச் சரித்­திரம் இல்லை. இரு கரம் கூப்பித் தன்னை நாடி வரும் பக்­தர்­களை அர­வ­ணைத்துக் காக்கும் கோடி அற்­புதர் இவர்.

காலம்தான் எத்­தனை வேக­மாக ஓடு­கி­றது? அந்தப் பயங்­க­ர­வாத தாக்­குதல் சம்­ப­வங்கள் இடம்­பெற்று  ஒன்­றரை மாதங்­க­ளாகி விட்­டன.

அன்­றைய தினம் நடந்த அசம்­பா­வித சம்­ப­வங்­களில் மனித உயிர்கள் காவு கொள்­ளப்­பட்­டன.   மழ­லைகள், சிறார்கள் உடல் சிதறி மாண்டு போனார்கள். இவை தவிர அவ­ய­வங்­களை இழந்தும் காய­ம­டைந்தும் அல்­ல­லு­றுவோர் பலர்.  இத்­தனை நடந்தும், காலமோ, தனக்கு இதில் எந்த சம்­பந்­தமும் இல்லை என்­பது போல்  உருண்­டோடிக் கொண்­டி­ருக்­கின்­றது.

மாண்­டவர் மீண்டும் வரப்­போ­வ­தில்லை. ஆனால் உற­வு­களைப் பிரிந்த உள்­ளங்கள்….?  அவை இன்­னமும் ஓல­மிட்டுக் கொண்­டுதான் இருக்­கின்­றன.

தாயை,  தந்­தையை, கண­வரை, மனை­வியை, பிள்­ளை­களை இழந்து தவிப்போர் என  ஏரா­ள­மானோர் இன்­னமும் உள்ளம் உடைந்து ஓல­மிட்டுக் கொண்­டுதான் இருக்­கின்­றனர்.

ஏன், வெளி­நாட்­டி­லி­ருந்து வந்­தி­ருந்த கோடீஸ்­வரர், தம் மூன்று செல்­வங்­க­ளையும் இழந்து விட்டார்… தம் நாட்டில் எப்­ப­டி­யெல்­லாமோ ஆடம்­ப­ர­மா­கவும் ஆனந்­த­மா­கவும் வாழ்ந்த இவர் நம் நாட்­டுக்கு வந்து, தம் மூன்று செல்­வங்­க­ளையும் பறி­கொ­டுத்­தி­ருக்­கிறார்.

ஆனந்­த­மாக ஈஸ்டர் தினத்தைக் கொண்­டாட நினைத்த அவ­ரது வாழ்­விலும் பேரிடி.

அதே­வேளை, தம் உற­வு­களைத் தேடி இன்­னமும் மக்கள் அலைந்து திரி­கி­றார்கள். “அவர்­க­ளுக்கு என்­னதான் நடந்­தது? எங்கே போனார்கள்…?”  – இப்­படி ஏங்கித்  தவிப்­போரும் இல்­லா­ம­லில்லை.

ஏன்…? உட­லங்கள் கிடைக்­காமல் தனியே தலைப் பகு­தி­களை வைத்து மரண சடங்­கு­களும் நடந்­தி­ருப்­ப­துதான் எல்­லா­வற்­றை­யும்­வி­ட­கொ­டு­மை­யான, கொடூ­ர­மான செய­லாகத் தோன்­று­கி­றது.

புனித வியாழன், பெரிய வெள்ளி திரு­வழி­பா­டு­களை பய­பக்­தி­யோடு அனு­ச­ரித்து, அல்­லே­லூயா கீதம் பாடி, இரவு திருச்­ச­டங்­கு­க­ளையும் நிறை­வேற்­றி­விட்டு மறுநாள் ஆனந்­த­மாகக் குடும்­பத்­தி­ன­ருடன் ஈஸ்டர் ஞாயிறு தினத்தைக் கொண்­டா­டலாம் எனக்  காத்­தி­ருந்த கிறிஸ்­த­வர்­க­ளுக்கு…அந்தோ … கிடைத்­தது அந்த அவலச் செய்தி…!

கொழும்பு, நீர்­கொ­ழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆல­யங்­களில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்புச் சம்­பவம் தந்த மாளா துயரச் செய்­திதான் அது.

எவ­ருமே நினைத்­தி­ராத அந்தக் குண்­டு­வெ­டிப்பு அனர்த்தம் கிறிஸ்­தவ மக்­களை மட்­டு­மல்ல, நாட்டின் அனைத்துத் தரப்­பி­ன­ரையும் உலுக்கி எடுத்­ததில் ஆச்­ச­ரியம் ஏது­மில்லை.

சமீப கால­மாக, அமை­தி­யான  சூழலில் வாழ்ந்து கொண்­டி­ருந்த நம் நாட்டு மக்­க­ளுக்கும் இது பேர­திர்ச்­சி­யான சம்­பவம் தான்.

கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் ஆலயம், நீர்­கொ­ழும்பு கட்­டு­வப்­பிட்டி புனித செபஸ்­தியார் ஆலயம், மட்­டக்­க­ளப்பு சீயோன் ஆலயம் என்­பன பயங்­கர­வாதத் தாக்­கு­தலில் சீர­ழிந்து போயின.

இவற்றில் புனித அந்­தோ­னியார் ஆலயம்  உலகப் பிர­சித்தி பெற்­றது. அப்­ப­டிப்­பட்ட ஓர் ஆல­யத்­திலா, இப்­ப­டி­யான ஒரு குண்டு வெடிப்புச் சம்­பவம் நிகழ வேண்டும்?

எத்­த­னையோ அற்­பு­தங்­களைச் செய்து மக்கள் மனதில் தனி­யொரு இடம்­பெற்­றவர் புனித அந்­தோ­னியார்.

பயங்­க­ர­வாத தாக்­கு­த­லை­ய­டுத்து ஆலயம் சோபை இழந்­தி­ருந்­தது. ஓர­ளவு புனர்­நிர்­மாணப் பணிகள் முடிந்து  ஆலயம் நேற்று அபி­ஷேகம் செய்­யப்­பட்டுத் திறந்து வைக்­கப்­பட்டது.

இன்­றைய திரு­விழா திருப்­பலி காலை 10  மணி­ய­ளவில், ஆல­யத்தில் ஒப்புக் கொடுக்­கப்­ப­டு­கி­றது.

வழமையாக திருவிழா தினத்தன்று, விடியற்காலை 4, 5, 6,7, 8, 9.30, 12.00 மணி எனத்  தொடர்ந்து திருப்பலிப் பூசைகள் இடம்பெற்று வந்த ஆலயத்தில்,  இன்று ஒரே ஒரு திருப்பலி மட்டுமே ஒப்புக் கொடுக்கப்படுகிறது. அதுவும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்.

ஆயிரக்கணக்கான  மக்கள் புடைசூழ வரும் புனிதரின் தன்னிகரற்ற பவனியும்  இன்று இல்லை.  கொச்சிக்கடை வட்டாரத்தையே ஆட்கொண்டு, கம்பீரமாக பவனிவந்த புனிதர் இன்று ஆலயத்திலேயே ஐக்கியமாகி விட்டார்.

இனிவரும் காலத்திலாவது இத்தகைய துர்ப்பாக்கிய நிலை ஒழிந்து சுமுகமான நிலைமை தோன்றுமா? பார்க்கலாம்.