ஞாயிறு தாக்குதல்களின் காயமடைந்து இன்றும் வைத்தியசாலைகளில் !-அரசாங்கம் மறந்துவிட்டது!

228 0

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி, கடன்நெருக்கடி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் காயமடைந்து இன்றும் வைத்தியசாலைகளில் இருப்பவர்களின் விவகாரங்கள் பற்றி அரசாங்கம் மறந்துவிட்டதென குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தீவிரவாதிகள் பற்றி இப்போது பேசப்படுவதில்லை. சுற்றிவளைப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டன. பயங்கரவாத சந்தேகநபர்கள் கைதுதொடர்பில் எதுவுமே பேசப்படுவதில்லை. ஆகமொத்தத்தில், ஒரே கல்லில் ஆயிரம் பறவைகளை அரசாங்கம் கொன்றுவிட்டது என்றார்.

விஜேராமவிலுள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில், நேற்று (11) இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய நிலைமையில், மற்ற மதங்கள் கொன்றொழிக்கப்பட்டு, காட்டுமிராண்டித்தனமான மத பயங்கரவாதம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. பௌத்த, ஹிந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் தங்களை பாதுகாத்துகொள்வதற்காக, பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்து அவர், இந்த தருணத்தில் மத்திய சிந்தனை வகிக்கும் முஸ்லிம்கள், பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்துகொள்ளவேண்டும்.

பிரிவினைவாத கருத்துகள் நாட்டுக்குள் ஊடுறுவியமையால், இலங்கை முஸ்லிம் பிரஜைகள் கொஞ்சம் கொஞ்சமாக, இலங்கை பி​ரஜைகளிடமிருந்து தூரத்துக்கு விலக்கிவைக்கப்பட்டனர் எனத் தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், இஸ்லாமிய தலைவர்களை போல, கற்றறிந்துகொண்டவர்கள் தங்களுடைய சுயவிமர்சனங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றார்.

1980களிலிருந்து முஸ்லிம் அரசியல் கட்சிகள் உருவாகியுள்ளன. ஆகையால் அரசியல்துறையில், அவர்கள் தனியாக பயணிப்பதற்கு ஆரம்பித்தனர். இலங்கை முஸ்லிம்கள் ஏனைய, இலங்கை பிரஜைகளை தூரவிலக்கிக்கொண்டு செயற்பட்டதன் உச்சமான பிரதிபலானாகவே, முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக இராஜினாமா செய்ததை தாங்கள் பார்க்கின்றோம். இராஜினாமா செய்தவர்கள் நான் சந்தித்தபோது, அவர்களுக்கு, இதுதொடர்பில் எச்சரித்தேன் என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சி, அரசியல் செயற்பாடுகளுக்காக முஸ்லிம் பிரஜைகளை, பயன்படுத்திகொண்டுள்ளது. முஸ்லிம்களை அரசாங்கம் அடக்கிவைத்துகொள்வதற்கு முயல்கிறது. அது முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வாகாது என்றார்.