மதில் மேற்பூனையின் வேடிக்கை

363 0

மீண்டும் ஒரு முறை, பேரினவாத நிகழ்ச்சி நிரல் நிறைவேறி இருக்கிறது.  இந்தப் பேரினவாதத்துக்கு எதிரான நகர்வுகளுக்கான கோரிக்கைகள் வந்த வண்ணமிருந்தாலும் மிக வன்மையான கண்டனங்களும் பலபக்கங்களில் இருந்தும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம் அரசியல் தலைமைகள் கூட்டாக முன்னெடுத்த அமைச்சர், பிரதியமைச்சர், இராஜாங்க அமைச்சர் ஆகிய அமைச்சுகளிலிருந்து இராஜினாமாச் செய்தமை, சிறந்த இராஜதந்திர அணுகுமுறையாகப் பேசப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் எதிரொலி, இன்னமும் ஓய்ந்துவிடவில்லை. தாக்குதல் நடத்தியவர்களின் நோக்கம் நிறைவேறியதோ இல்லையோ, எந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதியும் அமைச்சு அதிகாரங்களில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நியாயத்தைச் சொல்வதற்கு, பல்வேறு வழிகள் இருக்கின்றன. அதில் ஒன்றாகத்தான், முஸ்லிம் அரசியல் தலைமைகள், தமது  பதவி விலகலைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

எரிமலையாக வெடிக்கும் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று பௌத்த தேரர்கள் போராடுகிறார்களா,  முஸ்லிம்களைத் தமிழர்களுக்கு அடுத்த படியாக அடக்குவதற்கு, முயற்சிக்கிறார்களா என்பது தெரியவில்லை.

மகிழ்ச்சியையும் அனுதாபத்தையும் கவலையையும் ஒன்றுசேர, ஒரே நேரத்தில் அனுபவிப்பதுதான் வாழ்க்கை. அதற்குள்தான் எத்தனை வெட்டுக்குத்துகளும் அதிகாரப் போட்டிகளும் அடக்குமுறைகளும் என எல்லாமே அடங்கியுள்ளன என்று, திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டிய நிலையில்தான், இலங்கையின் சிறுபான்மைத் தமிழ், முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுவதற்கு, நாட்டின் ஒழுங்குமுறைமையில் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள  அரசியல்  நகர்வுகள் குறித்து, யாருக்கும் எந்தக் கருத்தையும் வெளியிட முடியாத சூனிய நிலைமைதான் காணப்படுகிறது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பின்னர், இலங்கையில் மாத்திரமல்ல, உலகளவில் முஸ்லிம்களுக்கெதிரான நிலைப்பாடொன்று ஏற்பட்டிருந்தது. இந்தத்  தாக்குதலைத் தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், விரைவான நடவடிக்கைகள் தொடர்ச்சியான சுற்றி வளைப்புகள், தேடுதல்கள் காரணமாக இஸ்லாமியர்களின் முக்கிய மாதமான ரமழான் மாதம் மகிழ்ச்சியோ, நிம்மதியோ, அமைதியோ இல்லாத மாதமாகத்தான் கழிந்தது.

ஆனால், ரமழான் மாதம் நிறைவு வரையில், முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஏன் இந்தப் பதவி துறத்தலைச் செய்யாது, காலம் தாழ்த்தினார்கள் என்று ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்ள முடியும்.
அரசியலில், அதிகாரத்தின் பக்கமே எப்போதும் இருக்கின்ற அரசியல் தந்திரம், எல்லோருக்கும் சாத்தியமானதல்ல. ஆனால், இதனைக் கடைப்பிடிப்பவர்கள், அதிகாரத்தைத் துறத்தல் என்ற நிலைப்பாட்டை அவ்வளவு விரைவாக எடுத்துவிட மாட்டார்கள்.

2015களுக்குப்பிறகு, இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் ரீதியான மாற்றங்கள், மேம்பாடு அல்ல; வீழ்ச்சி நிலை என்றுதான் சொல்லிக் கொள்ளமுடியும். இதற்குள்தான், இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களும் நடைபெற்றன. இது முஸ்லிம்களுக்கு நாடு, தேசியம் சார்ந்து பாதகமானதாகத்தான் இருக்கிறது. ஆனால், ‘பூனை கண்ணை மூடிக்கொண்ட நிலையில்’ பெரும்பாலான முஸ்லிம், தமிழ்த் தரப்புகள் இருந்து கொண்டிருப்பதுதான் வேடிக்கை.

இந்த இடத்தில், ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தினக் குண்டுத் தாக்குதல்களின் பின்னர், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல், நாட்டின் அனைத்து இன மக்களையும் பாதித்துள்ளது. எனினும், குறிப்பாக  முஸ்லிம் சமூகத்தைப் பல்வேறு வகையிலும், பாரிய அளவில்  அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.

இப்பயங்கரவாதத்துக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை இராணுவத்தினரும், பொலிஸாரும் மிகப்பரவலாக முன்னெடுத்து வருகின்றனர். அதற்கான பூரணமான ஒத்துழைப்பை முஸ்லிம் சமூகம் இதுவரை வழங்கி வருகின்றது. இல்லையானால், அரசாங்கத்தால் நாட்டின் பாதுகாப்பை இவ்வளவு விரைவாக உறுதிப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. இருந்தாலும், பேரினவாதத்தின் எதிர்ப்பு நிலைப்பாட்டில் மாற்றம் பெறவில்லை.

இப்படியானதொரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த பேரினவாத இனவாத சக்திகள், தங்களது சுயநல அரசியல்  தேவைகளுக்காகவும் முஸ்லிம் விரோத பழிவாங்கல்களுக்குச் சாதகமாகவும் பயன்படுத்தி, முஸ்லிம்கள் மீதான தங்களது அடக்கு முறைகளையும் இனவாத வன்முறைகளையும் பல வழிகளிலும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வைத் தூண்டக்கூடிய வெறுப்புணர்வுப் பேச்சுகளையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் முஸ்லிம்களின் துறைசார் புத்திஜீவிகள் மீதும் சுமத்தி, அவர்களுக்குப் பயங்கரவாத சாயம் பூசவும் அவர்களைக் கைது செய்யவும் முயற்சித்து வருகின்றனர் என்பதே, முஸ்லிம் தரப்புகளது ஒட்டுமொத்தக் குற்றச்சாட்டாக இருக்கிறது.

இலங்கை உட்பட, பல்வேறு நாடுகளில் தொடர்ச்சியாகப் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவரும் நிலையில் தான், முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடினர். மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக இருந்த போதிலும், இவ்வருடம் மிகவும் அமைதியாக, இப்பெருநாள் முஸ்லிம்களால் கொண்டாடப்பட்டிருக்கிறது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் தாயக உரிமைக்கான இன விடுதலைப் போராட்டம் 2009 மே மாதத்தில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், முஸ்லிம்களுக்கு எதிரான குழப்பங்கள் தொடங்கப்பட்டிருந்தன. இலங்கை நாட்டைப் பொறுத்த வரையில், பல்வேறுபட்ட பிரதேசங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். அனேகமான பிரதேசங்களில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் தனித்துவத்துடனும்  வாழும் பிரதேசங்கள் என்றும் சில நகரங்களில் ஏனைய இனத்தவர்களுடன் கலந்தும் வாழ்கிறார்கள்.

இருந்தாலும், நாட்டின் பல பிரதேசங்களிலும் வன்முறைகள் வெடித்து  அவர்களின் உயிர்கள், உடைமைகள் சேதமாக்கப்பட்டும், பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டும் இருக்கின்றன. பெரும்பான்மையின இனவாத அமைப்புகள் தங்கள் கைவரிசைகளைக்காட்டிய போதும், அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இப்போது, நல்லாட்சி அரசாங்கம், முஸ்லிம் மக்களினுடைய விடயங்களில் மிகவும் பாராபட்சமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்ற குற்றச்சாட்டு வலுப்பெறும் நிலை உருவாகியிருக்கிறது. இது ஜனாதிபதிக்கும், பிரதமர் தலைமையிலான அரசாங்கத்துக்கும் இடையிலான, இழுபாடான உறவுநிலை முரண்பாட்டின் காரணமாகவும் உருவாக்கப்பட்டிருக்கலாம். என்றாலும், பொதுப்படையில் நாட்டின் செயற்பாடுகளில் இரண்டு தரப்பும் இணைந்து செல்வதே, சிறப்பானதாக இருக்கும் என்பது உண்மையென்றாலும், நமது நாட்டில் இது சாத்தியப்படுவதாக இல்லை.

இவ்விடத்தில், ஞானசார தேரர் ஆறு வருடங்கள் தண்டனை வழக்கப்பட்டு சிறையில் இருந்தவரை, அவர் வன்முறைகளுக்குத் தூபமிடக்கூடியவர் என்று தெரிந்திருந்தும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் எதிர்விளைவுகள் வெட்டவெளிச்சமாக இடம்பெற்றுக்  கொண்டிருக்கையில், ஜனாதிபதியால் விடுவிக்கப்படுகிறார் என்றால், இதன் பின்புலம், உள்நோக்கம் என்ன என்று கேட்டுக் கொள்ளத்தான் முடியும்.

அதேநேரத்தில் இலங்கை ஒரு பௌத்த நாடு, இங்கு பௌத்த மதத் தலைவர்கள் என்று சொல்கின்ற பிக்குகளுக்குத்தான் முதலிடம் வழங்கப்படும் என்றால், இதனை ஒரு ஜனநாயகக் குடியுரிமை கொண்ட நாடு என்று சொல்லிக்கொள்ள முடியுமா என்ற கேள்வியும் உருவாகும்.

தாக்குதல்கள் நடைபெற்றதையடுத்து, உருவான இஸ்லாமியப் பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாட்டுச் சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் மிகவும் பொறுமையோடு தங்களது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர். ஒரு குறிப்பிட்ட சிலரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு முழு முஸ்லிம் சமூகமும் பொறுப்பாவதா, அனைவரும் தீவிரவாதிகள் அல்ல என்ற அடிப்படை, அனைவராலும் புரிந்து கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக இருந்த எம்.எல்.ஏம். ஹிஸ்புல்லாஹ், மேல்மாகாணத்தின் ஆளுநராக இருந்த அசாத் சாலி ஆகியோர் தங்களது பதவி விலகலை அறிவித்ததையடுத்து, இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டு,  அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் தங்களது அமைச்சுப் பதவிகளைத் துறக்க முடிவு செய்தனர்.  இது ஒரு பெரும் அரசியல் தந்திரோபாய நகர்வாக இருந்தாலும் இப்போது பெரும்பான்மைத்தரப்பால் இவர்களில் குற்றச்சாட்டுக்கு உட்பட்டிருப்பவர்களான ஹிஸ்புல்லாஹ், ரிசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் வந்த வண்ணமிருக்கின்றன.

அதாவது, அமைச்சுப் பதவிகளிலிருந்தோ, ஆளுநர் பதவிகளிலிருந்தோ விலகினால் மாத்திரம் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்து விடாது. பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும் என்பதுதான் அந்த நிலைப்பாடு. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள, நம்பிக்கையில்லாப் பிரேரணை முடிவுக்கு வரமுன்னரே இந்தப் பதவி விலகல்கள் நடைபெற்று முடிந்துவிட்டன. இதனால் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் சந்தோஷப்பட்டுவிட முடியாது.

தமிழ் மக்கள் துன்பப்படும்போது, முஸ்லிம் மக்களையும் முஸ்லிம் மக்கள் அல்லற்படும் போது, தமிழ் மக்களையும் பயன்படுத்திக் கொள்ளும் சிங்களப் பெரும்பான்மையினரின் சூழ்ச்சிகள் மிக்க தந்திரோபாயத்துக்குள் சிக்கிக்கொள்ளாதவர்களாக  இருப்பதற்கு, தமிழ் பேசும் சமூகம் புத்திசாதுரியமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும். மதில் மேற்பூனை விளையாட்டு, இனிமேலும் சரிவராது என்பதை, நாம் விளங்கிக்கொள்வதுடன், ஏனையோருக்கும் விளக்க வேண்டும்.