திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

301 0

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது,

திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடிகாவெவ , ஜூல்பள்ளம பகுதியில் விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்து கொண்டு இன்று வியாழக்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த குறித்த நபர் இனந்தெரியாத நபர்களால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான நபர் படுகாயமடைந்த நிலையில் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

இதனைத் தொடர்ந்து தெபரவெவ வைத்தியசாலையின் பொலிஸ் பிரிவு திஸ்ஸமஹாராம பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர். பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் கொடிகாவெவ , ஜூல் பள்ளம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்டு வீடு வரும் போது அவரது வீட்டின் நுழை வாயிலுக்கு அருகில்  வைத்தே  சிலர் இவர் மீது தாக்குதலை மேற்கொண்டு படுகாயமடையச் செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.