மதுரையில் அரசு பள்ளி, அல்ட்ரா மார்டன் பள்ளியாக மாறியது -எச்.சி.எல் நிறுவனரின் சாதனை

513 0

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எலின் நிறுவனர் ஷிவ் நாடார். இவர், தான் படித்த அரசு பள்ளியையே தத்தெடுத்து அல்ட்ரா மார்டன் பள்ளியாக மாற்றியுள்ளார். இது குறித்த சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.

தான் படித்த பள்ளிக்கு மேசை வாங்கி தருவது, கட்டிடம் கட்டித்தருவது என சிறு சிறு உதவிகளை செய்யும் முன்னாள் மாணவர்களை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், இங்கு பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் பள்ளியையே தத்தெடுத்து மாபெரும் மாற்றம் செய்துள்ளார்.

ஆண்டுதோறும் அமெரிக்காவின் பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியாகும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்று விடுவார் ஷிவ் நாடார். இவர் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எலின் நிறுவனராவார்.

இவர் மதுரையில் உள்ள இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். ஷிவ், இன்றளவும் தான் ஒரு முன்னணி கோடீஸ்வரராக இருக்க காரணம் பயின்ற பள்ளிதான் என கூறுவார்.

இந்த பள்ளிக்கு ஷிவ் நடார் என்ன செய்தார்? எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி ரூ.15 கோடி செலவில் மேல் தளங்கள் கட்டிக் கொடுத்துள்ளார். மேலும் பள்ளியை முழுவதுமாக தத்தெடுத்து பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளார்.

இந்த மாபெரும் உதவி குறித்து அப்பள்ளியின் ஆசிரியை ஒருவர் கூறுகையில், ‘இந்த கட்டிடம் உலக தரம் வாய்ந்ததாக உள்ளது. ஆங்கில வழி கல்வி பயிலும் பள்ளிகளுக்கு இணையாக இருப்பதை நாங்கள் உணர்கிறோம்.
இன்னும் கட்டிட பணிகள் முழுவதுமாக முடிக்கப்படவில்லை. 10 நாட்கள் கழித்து வந்து பார்த்தால் ஜொலிக்கும்’ என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

 

அடிப்படை வசதிகளான கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சமையலறை, நூலகம், குளிரூட்டப்பட்ட கணினி அறை என அனைத்தையும் உலக தரத்துக்கு அல்ட்ரா மார்டனாக மாற்றிக் கொடுத்துள்ளார். பள்ளியை பார்க்கவே மக்கள் வந்து போகும் அளவிற்கு அமைப்பையே மாற்றி இருக்கிறார் இவர்.

இதனால் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் அப்பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆண்கள் பள்ளியாக இருந்த இப்பள்ளியில் இந்த ஆண்டு முதல் பெண்களும் சேர்க்கப்பட உள்ளனர்.

இது மட்டுமின்றி அப்பள்ளியை பராமரிக்க 15 பேரை தானே நியமித்துள்ளார் ஷிவ். பழமை மறவாத ஷிவ் நாடாருக்கு அனைத்து தரப்பு மக்களும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.