உள்ளாட்சி தேர்தல்- கமல்ஹாசன் தீவிர ஆலோசனை

308 0

பாராளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்றதால் அடுத்து நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்குவதற்கான பணிகளில் கமல்ஹாசன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.

கட்சி தொடங்கி ஒரு ஆண்டுக்குள் தேர்தலை சந்தித்தாலும் கூட சுமார் 4 சதவீத வாக்குகளை பெற்றார். 4 தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றார்.

பாராளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்றதால் அடுத்து நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கமல்ஹாசன் கட்சி தொடங்கியபோதே உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் அந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று அறிவித்தார்.

மேலும் கமல் தனது கொள்கைகளில் மிக தீவிரமாக இருப்பது உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை மீட்டெடுப்பதில் தான். தமிழ்நாடு முழுக்க கிராமசபை கூட்டங்களை தீவிரமாக நடத்தி காட்டினார். இருந்தாலும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கமல் கட்சிக்கு கிராமங்களை விட நகரங்களில் தான் அதிகமான வாக்குகள் கிடைத்தன.

படித்தவர்கள் வாக்குகள் தான் அதிகமாக விழுந்தன. ஓட்டுக்கு பணம் கொடுத்தது தான் இதற்கு காரணம் என்று ஏழ்மையையும் வறுமையையும் அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று கமல்ஹாசன் குற்றம் சாட்டினார்.

தமிழக அரசு ஆகஸ்டு இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக திட்டமிட்டு வருகிறது. இந்த தேர்தலில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 நகர பஞ்சாயத்துக்கள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 12,524 கிராம பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் கிராமப்புற வாக்குகளை மக்கள் நீதி மய்யம் இழக்க காரணம் அறிமுகம் இல்லாத வேட்பாளர்கள் அதிகமாக நிறுத்தப்பட்டதே ஆகும். இதை உணர்ந்த கமல் இந்த தேர்தலில் உள்ளூரில் அறிமுகமான வேட்பாளர்களை நிறுத்த உள்ளார்.

இதற்கான வேட்பாளர் தேர்வு விரைவில் தொடங்க உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி குழு உருவாக்கப்பட்டு அவர்கள் மூலம் தகுதியான வேட்பாளர்கள் கண்டறியப்பட்டு வருகிறார்கள்.

இந்த வேட்பாளர்கள் தேர்வில் பஞ்சாயத்து கவுன்சிலர் முதல் மேயர் பதவி வரை அனைத்து பதவிகளுக்குமான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

கட்சி அடிப்படை கட்டமைப்பான பூத் கமிட்டிகள் உருவாக்குவதிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்கள். கிராமப்புறங்களில் மக்கள் ஆர்வமாக வந்து கட்சி உறுப்பினர்களாக சேர்வதாக நிர்வாகிகள் கூறுகிறார்கள். கிராமப் புறங்களில் கவனம் செலுத்தும் விதமாக தமிழகம் முழுக்க காலியாக உள்ள கட்சி பணிகளுக்கு பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான வேலைகளில் கமல்ஹாசன் தீவிரமாக இறங்கியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-ம் பாகம் இந்த மாத இறுதியில் தொடங்கப்பட இருக்கிறது. அந்த நிகழ்ச்சி மூலமும் பெண்கள் மற்றும் மேல்தட்டு மக்களிடம் எளிதாக சென்று அடைந்து விட முடியும் என்று நம்பும் கமல்ஹாசன், உள்ளாட்சித் தேர்தலில் மற்ற கட்சிகளுக்கு கடும் போட்டியாக மக்கள் நீதி மய்யம் உருவாக வேண்டும் என்று கடுமையாக தனது நிர்வாகிகளிடம் சொல்லி இருக்கிறார்.

மக்கள் நீதி மய்ய கட்சி நிர்வாகிகள் இதுகுறித்து கூறியதாவது:-

உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்து போட்டியிடுவது என்றும், அதன் வெற்றி வியூகம் குறித்தும் சில நாட்களாக ஆலோசனை கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க. போல அடிமட்டத்தில் வலுவான கட்டமைப்பு இல்லாவிட்டாலும் கூட தமிழகம் முழுக்க கடந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றுள்ளது. எனவே கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தினால் அடுத்து வரும் தேர்தல்களில் கட்சியின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என்பது கமல்ஹாசன் திட்டம்.

தேர்தலுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனம் மூலம் அவர் நடத்திய சர்வேயில் 15-20 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என தெரிய வந்தது. தங்கள் கட்சிக்கு வர வேண்டிய 15 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளில் 10 சதவீதத்துக்கும் மேலான வாக்குகள் தி.மு.க. பக்கம் சென்றுவிட்டதாக கமல் நினைக்கிறார்.

பாராளுமன்ற தேர்தலில் கமலுக்கு ஓட்டு போடுவதால் எந்த லாபமும் இல்லை என்ற ரீதியில் தி.மு.க செய்த பிரசாரமே இதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. எனவே இந்த தேர்தலில் இதுபோன்ற பிரசாரம் வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார். உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை உள்ளூர் பிரச்சனைகளும் உள்ளூர் வேட்பாளர்களுமே முக்கிய பங்கு வகிப்பார்கள்.

எனவே தமிழகம் முழுக்க கிராமப்புறங்களில் நிலவும் முக்கிய பிரச்சனைகள் பற்றி சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. எங்கள் கட்சியின் பிரசாரத்தில் அது நிச்சயம் எதிரொலிக்கும். அடுத்து வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் வெல்வதற்கான வலுவான அடித்தளமாக இந்த உள்ளாட்சி தேர்தலை கமல் பார்க்கிறார்.

எனவேதான் கடந்த பாராளுமன்ற தேர்தலை விட உள்ளாட்சி தேர்தலில் அதிக கவனம் செலுத்துகிறார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.