ஒரே பெயரில் 2 அடையாள அட்டைகளை வைத்திருந்தவர் கைது!

229 0

ஒரே பெயரில் வெளியிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டைகள் இரண்டு, வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மூன்றை தம்வசம் வைத்திருந்த ,நபரொருவர் அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து பாதுகாப்பு தரப்பினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கெப் ரக வாகனமொன்றில் சந்தேகநபர் பயணித்துக் கொண்டிருந்த போது, வீதி பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார், இராணுவத்தினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மாவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அடையாள அட்டைகள், வெளிநாட்டு கடவுச்சீட்டுகளில் அபு பாஹிர் மொஹமட் முஸாமில் என்ற பெயரே காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 31ஆம் திகதியே சவூதியில் இருந்து சந்தேகநபர் நாடு திரும்பியுள்ளாரென்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு காணாமல் ​போன பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு மீண்டும் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வௌ்ளவத்தையில் கல்வி கற்கும் தனது மகளை அழைத்துச் செல்வதற்காக வந்ததாகவும், பாதை தெரியாமல் அத்துருகிரிய திசை நோக்கி பயணித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சந்தேகநபர் பயணித்த வாகனத்தில் அவரது குழந்தையும் மனைவியும் இருந்ததாகவும் மேலதிக விசாரணைகளுக்காக குறித்த மூவரும் அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், குழந்தையும் அவரது மனைவியும் விசாரணைகளின் பின்னர்  அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.