‘ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணையை ஜனாதிபதி, பிரதமர் முன்னின்று தோற்கடிப்பர்’

186 0

சத்திய தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிச்சயம் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னின்று தோற்கடிப்பார்கள் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினரும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினருமான எம். ஜலீல் தெரிவித்தார்.

மாவடிப்பள்ளியில் உள்ள இவரின் இல்லத்தில், இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், இந்நாட்டில் வாழ்கின்ற ஒட்டுமொத்த 20 இலட்சம் முஸ்லிம்களினதும் குரலாக எமது தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஒலிக்கின்றார். ஆகவேதான் இவரின் குரல்வளையை ஒரேயடியாக நசுக்குவதற்கு பேரினவாதம் முயற்சிக்கின்றது. இவரை அடக்குவதன் மூலமாக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அடக்கி ஆள முடியும் என்று பகல் கனவு காண்கின்றது என்றார்.

ஆகவேதான் முற்றிலும் கற்பனை புனைவுகளுடன் கூடிய நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை தயாரித்து உள்ளது. இவருக்கு எதிராக ஏராளமான போலி குற்றச்சாட்டுகளை காலத்துக்கு காலம் தாராளமாகவே முன்வைத்து அவற்றில் ஒன்றைக்கூட நிரூபிக்க முடியாமல் வருட கணக்காக தருணம் பார்த்து காத்திருந்த பேரினவாதம் அதன் கையாலாகத்தனம் மீதான் ஆத்திரத்தை தீர்ப்பதற்குதான் இப்பொழுது நம்பிக்கை இல்லா பிரேரணையை முன்வைத்திருக்கின்றது என்பதே உண்மை ஆகும்.

இந்த நாட்டில் நல்லாட்சியை உருவாக்குவதற்கு முன்னின்று உழைத்ததன் மூலம் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொடூர ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர முக்கியமாக பங்களித்தவர் எமது தலைவரே ஆவார். அதற்காக எமது தலைவரை பழி வாங்குவதன் மூலம் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பலிக்கடாக்கள் ஆக்குவதற்கு பேரினவாதம் கங்கணம் கட்டி செயற்படுகின்றது. ஆயினும் நல்லாட்சியின் நாயகர்களாக எமது தலைவரால் கொண்டு வரப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நன்றி மறவாதவர்களாக செயற்பட்டு நன்மையின் பக்கம் நின்று எமது தலைவருக்கு எதிரான பிரேரணையை முன்னின்று தோற்கடிப்பார்கள் என்பது எமது நம்பிக்கை ஆகும்.

அதே போல முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு நின்று எமது தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிச்சயம் தோற்கடிப்பார்கள். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அநியாயத்துக்கு துணை போக மாட்டார்கள் என்று நாம் விசுவாசிக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.