தமிழகம் முழுவதும் 28 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் நியமனம்

361 0

தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 28 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 28 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்த போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், மேலும் 13 பேர் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

தனிப்பிரிவு
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக தமிழக போலீசில் ஏற்கனவே தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. தலைமையில் இந்த பிரிவு தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் 3 போலீஸ் சூப்பிரண்டுகள் பதவி வகிக்கிறார்கள்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விரைவாக விசாரித்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்காக இந்த தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது.
கூடுதல் சூப்பிரண்டுகள்
இந்த தனிப்பிரிவில் தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், நகரங்களிலுமாக 41 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் கூடுதல் துணை கமிஷனர்கள் புதியதாக பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இதில் 28 பேர் தற்போது பணிநியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நேற்றிரவு பிறப்பித்தார்.
இந்த 28 பேரும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பணியாற்றியவர்கள் ஆவர். இதன் மூலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் இனிமேல் கூடுதல் சூப்பிரண்டு மற்றும் கூடுதல் துணை கமிஷனர்கள் பதவிகள் இருக்காது.
மீதமுள்ள 13 இடங்களுக்கு விரைவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் நியமிக்கப்படுவார்கள் என்று டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.