கன்னியா வெந்நீரூற்று, புராதன விநாயகர் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைக்கும் செயலுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
ஆண்டுகள் பல கடந்தாலும், ஆட்சிகள் பல மாறினாலும் இந்நாட்டில் வாழும்இந்துக்கள் மீது மத ரீதியாக ஏதோ ஒரு வகையில் அடக்குமுறைகளும் துன்புறுத்தல்களும் அதர்மமான செயல்களும் நடந்து கொண்டேயிருக்கின்றன.
இந்நாட்டின் அரசாங்கம் 2015ஆம் ஆண் டில் நல்லாட்சி என்ற வாசகத்துடன் ஆட்சிப் பொறுப்பிலமர்ந்த போது, இந்நாட்டில் நல்லிணக்கம் உருவாகி சமாதான சகவாழ்வு மலரும் என்ற பெரும் நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இருந்தது. ஆனால் அரசோ, அரச நிறுவனங்களோ செயற்பட்டு வரும் முறையானது, தமிழ் மக்களின் அந்த நம்பிக்கையைக் குறைத்து இல்லாமற் செய்வதுபோல் உள்ளது. ஈழத்திருநாட்டின் பல பகுதிகளிலும் இந்து மத தொன்மைச் சின்னங்கள் காணப்படுகின்றன. அச் சான்றுகள் காலத்துக்கு முந் திய வரலாற்றைப் பறைசாற்றி நிற்கின்றன. இவற்றையெல்லாம் மாற்றியமைத்து, அவற்றைப் பௌத்த சின்னங்களாக திரிபுபடுத்தி, வரலாற்றை மாற்றும் கைங்கரியத்தை தொல்லியற் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
ஓர் அரச திணைக்களம் என்ற வகையில் அது, இந்நாட்டு மக்களுக்கு இன-, மத,-மொழி வேறுபாடின்றிச் செயலாற்ற வேண்டியது சட்டத்தின்படி கட்டாயமானதாகும்.
தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள இந்து ஆலயங்கள் மற்றும் தமிழரின் புராதன வாழ்விடங்கள் தொடர்பில் பல தடவைகள் அரசுக்கு முறையிட்டும் அரசாங்கமும் பாராமுகமாக இருந்து வருகின்றது. இது எமது மக்களை வேதனை கொள்ளச் செய்துள்ளது.
திருகோணமலை சிவன் ஆலயம், கன்னியா வெந்நீரூற்றுகள் ஆகிய கிழக்கு மாகாண இடங்களிலும், வடக்கில் மன்னார் திருக்கேதீச்சரம், செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம், வெடுக்குநாரிமலை எனப் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தொல்லியல் திணைக்களத்தால் பட்டியற்படுத்தப்பட்டு, அங்கு பௌத்த விகாரைகள் அமைப்பதற்கு திணைக்களம் நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவி வருகின்றது.
இந்த வகையில்தான், திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவில் அமைந்துள்ள காணியும் தொல்லியல் திணைக்களத்தால் புராதன இடமாக பட்டியற்படுத்தப்பட்டு அந்தப் பிள்ளையார் கோவில் கட்டிட வேலைகளுக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்ட அதேவேளை, அருகிலுள்ள வில்கம் விகாராதிபதி தலைமையில் அந்தக் காணியில் அடாத்தாக குடியேறி விகாரை அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இச்செயற்பாடுகள் தொடர்பில் அகில இலங்கை இந்து மாமன்றம் தனது வன்மையான கண்டனங்களைத் தெரி விப்பதுடன், எமது உரிமைகளை மீட்டு எமது பாரம்பரிய சின்னங்களைப் பேணுவதற்கு மாமன்றம் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்காது என்பதையும் தெரி வித்துக் கொள்கின்றோம்.

