குருணாகல் வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதையடுத்து இங்கு பரபரப்பான நிலைமை உருவாகியுள்ளது.
வருமானத்தை மீறி சொத்துச்சேர்த்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு,கைதுசெய்யப்பட்டுள்ள மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்டீன் மொஹமட் ஷாபிக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது
“வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாபி மீதான விசாரணைகளுக்கு அரச தரப்பால் அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது.
அத்துடன்,விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வைத்தியர் சரத் வீரபண்டாரவுக்கு இடமாற்றம் வழங்க சுகாதார அமைச்சு முயற்சிக்கின்றது.இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். வைத்தியர் ஷாபிக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளவர்கள் கோஷம் எழுப்பினர்.
தேரர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக குருணாகல் பகுதியிலுள்ள கடைகள் மூடப்பட்டு, தீவிர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் காரணமாக இப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

